காவிரி விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியது பாஜகவின் கருத்து அல்ல- தமிழிசை பதிலடி

சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்தாகும். அது பாஜகவின் கருத்து அல்ல என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். கர்நாடகா அரசு இன்னும் காவிரி நீரை திறந்துவிடாததால் சம்பா பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கை பதிவு செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நேரம் ஒதுக்க கோரியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார். எனினும் அதற்கு இதுவரை பதில் வரவில்லை.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவே கிடைக்காது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னிடம் கேட்டால் நான் ஏற்பாடு செய்வேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இத்தாலியில் இருந்து என்னால் 3 மாதத்தில் கொண்டு வரமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சை கருத்து

காவிரி விவகாரத்தில் மட்டுமல்லாது முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை என எதிலும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது என்று கருத்து நிலவும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனிப்பட்ட கருத்து

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிக்கையில், காவிரி விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து பாஜகவுடையது அல்ல. அதுஅவரது தனிப்பட்ட கருத்தாகும்.

நீதி விசாரணை தேவை

பாஜகவுக்கு எதிரான கருத்து தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டவர் பாஜக எம்பி சுப்பரமணியன் சுவாமி. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

tamil.oneindia.com

TAGS: