நியூயார்க்,
கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் 28 வயது உறவினரால் 8 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று பாகிஸ்தானில் கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் அந்நாட்டில் பெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்கிறது. இந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான செய்திகள் தினம் வெளிவந்த வண்ணமே உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. சபை கருத்து தெரிவிக்கையில் “இதயத்தை நொறுங்க செய்கிறது,” என குறிப்பிட்டு உள்ளது.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், “நீங்கள் குறிப்பிட்ட இரு சம்பவமும் இதயத்தை நொறுங்க செய்வதாக உணர்கிறேன்,”என குறிப்பிட்டார்.
“பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான கொடூரமான வன்முறையானது இல்லையென பூமியில் எந்தஒரு தேசமும் இல்லை என்பதை இது தெளிவுசெய்கிறது. இதுபோன்ற சம்பவங்களை வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து நாடுகளிலும் பார்க்கிறோம்,” என கூறிஉள்ளார் டூஜரிக். ஐ.நா. பெண்கள், யுஎன்எப்பிஏ ([ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்), யுஎன்ஐசிஇஎப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) மற்றும் பிற திட்டங்கள் மூலம் உலகில் அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்றி பெண்கள் மற்றும் சிறார்களுக்கு மதிப்பளியுங்கள் என்பது தொடர்பான செய்தியை சமூதாயத்திற்கு கொண்டு செல்ல ஐ.நா. பணியாற்றி வருகிறது எனவும் தெரிவித்தார் டூஜரிக்.
“இது பெண்களுக்கு சமஉரிமை சம்பந்தமானது. இது சுகாதாரத்தை அணுகுவது சம்பந்தப்பட்டது. கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் சம்பந்தமானது. அதிகமான மேம்பாட்டு திட்டங்களை கொண்டு ஐ.நா.சபை இப்பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்கிறது,” என டூஜரிக் பதிலளித்தார்.
-dailythanthi.com