சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்தனரா?

சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

சென்னையில் உள்ள ஷர்மா சென்டர் ஃபார் ஹெரிடேஜ் எஜுகேஷனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஷாந்தி பாப்பு மற்றும் குமார் அகிலேஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்திருக்கின்றன.

சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் அமைந்திருக்கிறது அதிரம்பாக்கம். இந்தப் பகுதியில் 1999ஆம் ஆண்டிலிருந்தே ஷாந்தி பாப்புவும் அவரது குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

“முதலில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அங்கு மனிதர்கள் வசித்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்திருக்கின்றன. இவை 3 லட்சத்து 85 வருடங்களிலிருந்து 3,25 லட்சம் வருடங்கள் வரை பழமையானவை. இதற்கு முன்பாக, இடைக்கற்காலம் என்பது இந்தியாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் துவங்கியது என்று கருதப்பட்டுவந்தது” என பிபிசியிடம் தெரிவித்தார் ஷாந்தி பாப்பு.

ஆனால், இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மனித எச்சங்கள் ஏதும் இதுவரை இங்கு கிடைக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமையன்று நேச்சர் இதழில் பதிப்பிக்கப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் இது குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கிறது.

பொதுவாக நவீன மனிதர்களும் மனிதர்களின் மூதாதையர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவினார்கள் என்பது பொதுவான புரிதல். அவர்கள் எந்த காலகட்டத்தில் எந்தெந்த கண்டங்களுக்குப் பரவினார்கள் என்பது குறித்த விவாதத்தில், தற்போதைய கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது நாம் கருதுவதைவிட சுமார் 1 லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே இந்த இடம்பெயர்தல் நடந்திருக்கலாம் என்பதை தற்போது கிடைத்துள்ள கற்கருவிகள் சுட்டிக்காட்டுவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“நவீன மனிதர்கள் உருவான பிறகு அதாவது 1,25,000 வருடங்களுக்கு முன்புதான் இடைக்கற்கால மனிதர்கள் இங்கு வந்ததாக இதுவரை கருதப்பட்டுவந்தது. இருந்தபோதும் தற்போதைய கண்டுபிடிப்பை வைத்து உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்தியாவின் பல இடங்களிலும் கிடைத்திருக்கும் கற்கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.” என்கிறார் ஷாந்தி.

மனித இன வளர்ச்சியில் பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் தோன்றிய காலகட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுமார் 3 லட்சம் வருடங்களுக்கும் 2 லட்சம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுவரை மிகப் பெரிய கற்கருவிகளைப் பயன்படுத்திவந்த மனித இனத்தின் மூதாதையர், சிறிய, திருத்தமான கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில்தான்.

தெற்காசியாவில் இதற்கு முன்பாக பல இடைக் கற்கால பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த இடைக்கற்கால கலாச்சாரத்தின் வயது, அந்தக் கலாச்சாரம் எப்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தது போன்றவை மிகக் குறைவாகவே ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. மரபியல் ரீதியான ஆய்வுகள், மனித எச்சங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலமாகக் கிடைத்த தகவல்களை வைத்து, நவீன மனிதர்களுக்கு முந்தைய ஹொமினின்களின் பரவலை உறுதிசெய்வதும் கடினமான காரியமாகவே இருக்கிறது.

ஒரு கூற்றின்படி, இந்தியாவில் இடைக்கற்காலம் என்பது ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதர்கள் வெளியேறிய காலகட்டத்தை ஒத்தது என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டம் 1,30,000 வருடத்திற்கும் 80 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலமாக கருதப்படுகிறது. டோபா எரிமலைச் சீற்றத்திற்கு தப்பிய மாந்தர்களே இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், மற்றொரு கூற்று 71 வருடங்களுக்கும் 57 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பரவல் நடந்திருக்கலாம் என்று கூறுகிறது.

இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் மிகப் பெரிய காலகட்டம் இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கதிர்வீச்சு ஆய்வுக்குட்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் தெற்காசியப் பகுதிகளில் மனித எச்சங்கள் இல்லாமல் இருப்பதும்தான் இந்த காலகட்டத்தை நிர்ணயம்செய்வதில் பெரும் தடையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தற்போது அதிரம்பாக்கத்தில் கிடைத்திருக்கும் முடிவுகள், இந்தத் திசையில் ஓரளவுக்கு உதவக்கூடும். ஷர்மா மையத்தைச் சேர்ந்த ஷாந்தி பாப்பு, அகிலேஷ் உள்ளடங்கிய குழுவினர் கொசஸ்தலை ஆற்றின் கிளை நதி ஒன்றுக்கு அருகில் 1999ல் இந்த ஆய்வைத் துவங்கினர். பல்வேறு இடங்களில் 4 முதல் 9 மீட்டர் அளவுக்கு குழிகள் தோண்டப்பட்டன. இந்தக் குழிகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் குழிகளில் உள்ள மண் படிவுகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 8 முதல் 6 வரையிலான பிரிவு பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது. இவை, 17 லட்சம் முதல் 10 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. 5 முதல் 1வது பிரிவு வரையிலான படிவுகள் இடைக்கற்காலத்தைச் சேர்ந்தவை.

இந்தப் பகுதியில் கிடைத்த கற்கருவிகளை ஆராய்ந்தபோது, கற்காலத்தைச் சேர்ந்தவர்களைப்போலவே, இடைக்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களும் அந்தப் பகுதியில் கிடைத்த கற்களை வைத்தே தங்கள் கற்கருவிகளைச் செய்திருக்கின்றனர் என்பதை அறியமுடிந்தது.

இதுதவிர பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் துவங்குவதற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் ஏதும் இங்கு கிடைக்கவில்லை. இது டோபோ எரிமலை வெடித்த காலத்தோடு ஒத்துப்போவதால், பருவநிலை மாற்றத்தால் இங்கிருந்தவர்கள் வெளியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பிந்தைய – பழைய கற்காலப் பகுதிகளைச் சேர்ந்த கருவிகள் கிடைக்கும் நிலையில், இங்கு அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கருவிகள் ஏதும் கிடைக்கவில்லை.

அதிரம்பாக்கத்தைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த கற்கருவிகளை வைத்து இங்கு வசித்தவர்கள் நவீன மனிதர்களா அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. நர்மதா நதிக்கரையில் கிடைத்த ஒரு மண்டை ஓட்டைத் தவிர, இந்தியாவில் இதுவரை மனித எச்சங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

“ஆனால், தற்போது கிடைத்திருக்கும் கருவிகளை வைத்து, இந்தியாவில் இடைக்கற்கால மனிதர்கள் 3.85 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து 1.72 லட்சம் வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்குவர முடியும்” என்கிறார் அகிலேஷ்.

அதிரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளின் காலம் அகமதாபாதில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியில் கணிக்கப்பட்டது. பொதுவாக அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் கார்பன் டேட்டிங் முறையில் காலக் கணிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், லட்சக்கணக்கான வருடங்கள் பழைய பொருட்களை காலக் கணிப்புச் செய்ய அந்த முறை உதவாது. ஆகவே, Luminescence dating என்ற முறை கையாளப்படுகிறது. அதாவது ஒரு பொருளில் ஒளிகடைசியாக எப்போது பட்டது என்பதை வைத்து அதன் காலத்தைக் கணிக்கும் முறை. அதிரம்பாக்கத்தில் கிடைத்த பொருட்கள் இம்மாதிரியான சோதனைக்கே உட்படுத்தப்பட்டன.

இதற்கு ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.கே. சிங்கி பெரிதும் உதவினார் என்று குறிப்பிடுகின்றனர் ஷாந்தியும் அகிலேஷும். மிகச் செலவுபிடிக்கும் இந்த முறையிலான காலக்கணிப்பை, தன் செலவிலேயே செய்து கொடுத்திருக்கிறார் ஏ.கே. சிங்வி.

அதிரம்பாக்கம் அகழ்வாராய்ச்சித் தலம் என்பது சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளாகவே தொல்லியளாளர்களின் கவனத்தை ஈர்த்துவந்திருக்கிறது. 1863ல் முதன் முதலில் ராபெர்ட் ப்ரூஸ் ஃபூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோரால இந்த இடம் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 1930களிலும் 60களிலும் இந்த இடம் ஆய்வுசெய்யப்பட்டது.

19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் இங்கிருந்து எடுக்கப்பட்ட கற்காலக் கருவிகள் உலகமெங்கும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதும் அதிரம்பாக்கம் பகுதியில் சுமார் 50,000 மீட்டர் பரப்பளவுக்கு கற்காலக் கருவிகள் சிதறிக்கிடக்கின்றன. -BBC_Tamil

TAGS: