இந்தியாவுக்கு ஆப்பு.. சீனா பக்கம் சாயும் மாலத்தீவு அதிபர்..?

மாலத்தீவு இந்தியாவிற்கு அருகே நேராக தென்பகுதியில் அமைந்திருப்பதால் இந்தியாவின் ராணுவ ரீதியான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இதுவரை மாலத்தீவு இந்தியாவை சார்ந்தே இருந்து வருகிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் அது திகழ்கிறது.

ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவுக்கு மாலத்தீவு மீது ஒரு கண் உள்ளது. ராஜபக்சே ஆட்சிகாலத்தில் இலங்கையை சீனா தன்பக்கம் வளைத்து போட்டது. அதேபோல மாலத்தீவையும் வளைத்து போடுவதற்கு பல ஆண்டுகளாகவே சீனா முயற்சித்து வருகிறது.

சீனாவின் முக்கிய எதிரிநாடாக இந்தியா உள்ளது. இந்தியாவை வடபகுதி வழியாக எதிர்ப்பதற்கு வேண்டுமானால் சீனாவுக்கு தேவையான நிலப்பரப்புகள் உள்ளன. ஆனால் தென் பகுதியில் சீனாவுக்கு எந்த இடமும் இல்லை.

எனவே தான் இலங்கையை தன் பக்கம் சாயவைக்க முயற்சித்தது. அதைத்தொடர்ந்து மாலத்தீவையும் இழுத்துவிட்டால் அங்கு ராணுவ முகாம்களை அமைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று கருதுகிறது.

மாலத்தீவில் இதற்கு முன்பு இருந்த அதிபர்கள் யாரும் சீனாவை தங்கள் பக்கம் நெருங்க விடவில்லை. எல்லா வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். ஆனால் அப்துல்லா யாமீன் பதவி ஏற்றதற்கு பிறகு அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான உறவிலும் முந்தைய அதிபர்கள் பின்பற்றிய நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை.

மாலத்தீவுடன் கடந்த காலங்களில் சீனா ராஜ்ய உறவுகளை வைத்துக் கொண்டதில்லை. 2011-ம் ஆண்டு தான் அங்கு சீனா முதல் முறையாக தூதரகத்தை தொடங்கியது.

அப்துல்லா யாமீன் அதிபராதற்கு பிறகு அதன் உறவுகளை மேலும் அதிகப்படுத்தியது. சீன அதிபர் கடந்த ஆண்டு மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல்வேறு அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக மாலத்தீவுக்கு உறுதி அளித்தார்.

கடற்கொள்ளையர்களை தடுக்கும் வகையில் இந்திய பெருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை அனுப்பி இருப்பதாக கூறிய சீனா அந்த போர்க்கப்பல்களை மாலத்தீவில் நிறுத்துவதற்கும் அனுமதி கேட்டது. அதற்கும் மாலத்தீவு அனுமதி கொடுத்தது.

ஆரம்பத்தில் சீனாவிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் இருந்த மாலத்தீவு சமீப காலமாக பல உதவிகளை பெற்று வருகிறது. சுமார் 7 சதவீத வெளிநாட்டு உதவிகள் சீனாவிடம் இருந்து வருகிறது.

எனவே இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அதிபர் அப்துல்லா யாமீன் சீனா பக்கம் சாய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை மாலத்தீவின் முன்னாள் சபாநாயகர் அப்துல்லா சாகித்தும் உறுதிபடுத்தி உள்ளார். அவர் இதுபற்றி கூறும்போது, மாலத்தீவில் நடக்கும் தற்போதைய விவகாரத்தில் இந்தியா மவுனம் காத்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் என்று இந்தியா கருதுகிறது. இந்தியா உடனடியாக தலையிடாவிட்டால் அது இந்தியாவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் அதிபர் அப்துல்லா யாமீன் சீனாவின் பக்கம் சாய்வதற்கு தயாராக இருக்கிறார். இப்போதைய நிலைமை குறித்து நாங்கள் மாலத்தீவில் உள்ள இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ராவிடம் விளக்கி சொல்லி இருக்கிறோம் என்று கூறினார்.

இதேபோல எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் அப்துல்லா யாமீன் சீனாவிடம் கைகோர்ப்பதற்கு தயாராக இருப்பதாகவே தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வல்சிபல் கூறும்போது, மாலத்தீவு வி‌ஷயத்தில் சீனா தலையிட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தியா எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மாலத்தீவில் சுமார் 25 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். மாலத்தீவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 6 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு இந்தியா தக்க முடிவுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 -athirvu.com
TAGS: