மாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை! அதிரடிக்கு வாய்ப்பு?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மாலத்தீவு விவகாரம் பற்றி தொலைபேசியில் நேற்று மாலை, ஆலோசனை நடத்தியுள்ளனர். இவ்வாண்டில் இவ்விரு தலைவர்களும் போனில் ஆலோசித்தது இதுதான் முதல்முறை என்பது கூடுதல் முக்கியத்துவம்.

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுக்கு நெருக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில்தான் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அதிபர் அபயம்

அதேநேரம், இந்தியாவுக்கு ஆதரவானவராக அறியப்படும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர் மொகமது நசீத், தமது நாட்டுக்கு இந்திய தூதர்களையும், ராணுவத்தையும் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்புடன் ஆலோசனை

இதுபற்றி இந்தியா இன்னும் ஒரு முடிவையும் எடுக்காத நிலையில், ட்ரம்ப்-மோடி நடுவேயான டெலிபோன் பேச்சின்போது, மாலத்தீவு விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரடி

மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க, அமெரிக்க துணையோடு இந்தியா அதிரடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்து, முன்னாள் அதிபர் மொகமது நசீத்துக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பை இந்த ஆலோசனை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு விஷயங்கள்

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை கொண்டுவருவது, ரோகிங்யா அகதிகள் பிரச்சினை, வட கொரியாவின் அணு ஆயுத குவிப்பு, இந்தியா-அமெரிக்கா நடுவேயான தொழில் வர்த்தக நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: