புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இமுகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தியை சந்தித்து பேசினார். இதற்கிடையே தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். முகாமில் இருந்த மக்களை ராணுவம் பத்திரமாக வெளியேற்றியது. பொதுமக்களில் ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 4 பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியது. 4-வது பயங்கரவாதி முகாமிற்குள் நுழையவில்லை, ஒருவேளை முகாமிற்கு வெளியே வரையில் உதவி செய்து இருக்காலாம். இன்று காலை 10:30 மணியளவில் ராணுவ முகாமில் தேடுதல் வேட்டையானது முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இயக்கப்பட்டு உள்ளனர் என்பதை உளவுத்துறை உள்ளீடுகள் காட்டுகிறது. ஆதாரங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்கிறது. எல்லையில் அத்துமீறிய தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யது உள்ளது. பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரால் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இருந்தும் உதவி வழங்கப்பட்டு உள்ளது. ஆதாரங்களை சேகரிக்கும் பணியானது முடிந்துவிட்டது. ஆதாரங்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.
தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை கோப்புகள், ஆதாரங்களும் வழங்கப்பட்டு வந்தாலும் பாகிஸ்தான் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு ஆதாரங்களை கொடுப்பது என்பது தொடர்ச்சியானதாக இருக்கும். பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பாகும் என்பதை நாம் மீண்டும், மீண்டும் நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான் தன்னுடைய தவறுக்கு விலைகொடுக்கும். ராணுவத்துடன் இந்திய அரசு துணை நிற்கிறது. எல்லைப் பிராந்தியங்கள் தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொள்கிறோம். பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறினார். இதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
-dailythanthi.com