100 வருட சிலைகளை கடத்தும் கும்பல் – விழி பிதுங்கும் போலிஸ்

சிலை கடத்தல் என்பது தற்போது தினமும் நடக்கும் திருட்டு தொழில்போல் மாறி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பாராம்பரியமிக்க 100 வருடத்திற்கு மேல் உள்ள கோவில்கள் குறிவைத்தே சிலை திருட்டு கும்பல் தமிழகம் முழுவதும் வலம் வருகிறது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ஸ்ரீநாராயண பிரமேந்திர மடாலயம் உள்ளது. இங்கு வாழ்ந்த ஸ்ரீநாராயண பிரமேந்திர சுவாமிகள் கடைசி 15 ஆண்டுகள் பிடி மணலும், தண்ணீரும் சாப்பிட்டு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் 1912-ம் ஆண்டு ஜீவ சமாதியடைந்தார்.

இதையடுத்து அவருடைய பக்தர்கள் அவர் வாழ்ந்த இடத்தில் மடாலயம் கட்டி மூலவரை கற்சிலையாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 30 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலையையும் நிறுவினர். அதற்கு தினமும் காலை, மாலை இரண்டு வேளை பூஜைகள் செய்து வழிபாடு நடந்து வந்தது.

இந்நிலையில் இரவு வழக்கம் போல் மடாலயத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழிபாட்டிற்காக மடாலய நிர்வாகி சின்மயானந்த சரஸ்வதி சுவாமிகள் மடாலயத்தை திறக்க சென்றார். அப்போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 106 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் உற்சவர் சிலை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். காட்டுபுத்தூர் தொட்டியம் இன்ஸ் – செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.புதிய டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற சீத்தாராமனுக்கு இது பெரிய தலைவலியாக உள்ளது.

தற்போது மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீநாராயண பிரமேந்திர மடாலயத்தில் 106-வது மகா குருபூஜை 3 நாட்கள் நடைபெற இருந்த நிலையில், உற்சவர் சிலை திருட்டு போன சம்பவம் இங்கு வரும் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • ஜெ.டி.ஆர்.
TAGS: