திருவாரூர்: திருவாரூர் அருகே கடம்பங்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உட்பட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிமாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது.
திருவாரூர் கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் 4 தினங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கடம்பங்குடி பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடம்பங்குடி பெண்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் தென்பாதி கிராமத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று கடம்பங்குடியில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஓஎன்ஜிசி பணிகளை தங்கள் பகுதியில் செயல்படுத்தக் கூடாது. இதனால் குடிநீர் ஆதாரம் பாதித்து வருவதால் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்று திருவாரூர் அருகே கடம்பங்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், பள்ளி மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற சுமதி என்ற பெண்ணும், சச்சின் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் மயக்கம் ஏற்பட்டாதால் பரபரப்பு.

























