நாடு முழுவதும் பதஞ்சலி யோகா மையங்கள் நடத்தி வரும் யோகா குரு பாபா ராம்தேவ் சில வருடங்களுக்கு முன் பதஞ்சலி நுகர்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார்.
இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மிகப்பெரிய ஆய்வுக்கூடம் நிறுவினார். இங்கு உணவுப் பொருட்கள், நுகர் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆயுர்வேத மருந்துகள் என மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களை தயாரித்து தர ஆய்வு செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்.
நாட்டின் முக்கிய நகரங்களில் பதஞ்சலி விற்பனை நிலையங்களை வணிகர்கள் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார்கள். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் பதஞ்சலி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற பிரபல நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பதஞ்சலி தயாரிப்பு பொருட்கள் விற்பனை ஆகிறது. பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் பதஞ்சலி பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார்.
கடந்த 2016-17-ம் ஆண்டில் பதஞ்சலி பொருட்கள் ரூ.9 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகி இருப்பதாகவும், மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பதஞ்சலி செய்தி தொடர்பாளர் எஸ்.கே.திஜரவாலா தெரிவித்தார். இதில் விளம்பரத்துக்கு மட்டும் ரூ.570 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.