பெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி, பெங்களூரில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் தமிழ் அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக தமிழ் இயக்கம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை கன்னட அமைப்பினர் அழித்து வருவதற்கும், தமிழர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பு சார்பில் பிப்ரவரி 25ம் தேதி பேரணி நடத்த உள்ளனர்.
பெங்களூர் ஆர்பிஎன்எஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆளுநர் மாளிகையை சென்றடைய உள்ளது. இருப்பினும் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய அமைப்புகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழர்கள் தனி குழுவாக கர்நாடகாவில் பேரணி போன்றவற்றை கன்னடர்களுக்கு எதிராக நடத்தியது கிடையாது. புதிதாக, அப்படி நடத்தினால் ஏற்கனவே வன்மத்துடன் உள்ள கன்னடர்களால் கலவரம் வெடிக்கலாம் என்பது பிற தமிழ் அமைப்புகள் அச்சம். காவிரி பிரச்சினை அடுத்த 15 வருடங்களுக்கு எழாது என்று நினைத்து வசிக்கும் கர்நாடக வாழ் தமிழர்களுக்கு இந்த பேரணி கிலியூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.