மதுரை : ஓட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள், ஓட்டுக்கு 6 ஆயிரம் வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சமே கிடைத்திருக்கும் என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து மதுரை ஒத்தகடை மாநாட்டில் உரையாற்றிய கமல் பேசியதாவது :
எனது கட்சியின் கொள்கைகள் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன் தரமான கல்வி எல்லாத்தரப்பினருக்கும் போய் சேர வேண்டும். சாதி, மத பெயர்களை சொல்லிச் சொல்லி செய்த விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். என்ன நடக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருப்போம். மின்சாரம் கிடையாது என்று சொல்ல வேண்டிய அவசியம்இல்லை, ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும்.
பற்றாக்குறைகள் வந்ததற்கு காரணம் பேராசையால் வந்தது. கைதட்ட வேண்டாம் மக்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது, இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தோம். ஐயா ஓட்டிற்கு 6 ஆயிரம் தருகிறார்கள் நீங்கள் தருவீர்களா எனக் கேட்டால் நான் தரமாட்டேன். எங்களிடம் பணம் இல்லை அப்படியே பணம் இருந்தாலும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். 6 ஆயிரத்தை வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும்.
உங்களுடைய ஓட்டின் விலை தெரியாமல் அதை அடிமாட்டிற்கு விற்றுவிட்டீர்கள். வியாபாரமாக இருந்தாலும் நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பீர்கள், நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும். 6 ஆயிரத்தை 5 வருடத்திற்கு வகுத்துப் பாருங்கள் ஒரு நாளைக்க 90 பைசாவோ என்னவோ தான் வரும்.
வருஷம் பூரா அவரிடம் நீங்கள் போய் எதுவும் கேட்க முடியாது. அவரிடம் கேட்டால் காசு வாங்கல வாயை பொத்திக் கொண்டு போ என்பார்கள். திருடன் என்று சொல்லும் போது தலை தெறிக்க ஓட வேண்டாமா, பின்னால் திரும்பி பார்த்து என்ன கூப்பிட்டது போல இருக்கிறது என்றால் எப்படி அதை தான் டுவிட்டரில் போட்டேன், இனியும் இந்த நிலை வரக் கூடாது என்று கமல் பேசினார்.