காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான செயின்ட் ஜோசப் கருணை இல்லதில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் என்ற பெயரில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு நாள்தோறும் முதியவர்கள் உயிரிழப்பதாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.
கூச்சலிட்ட மூதாட்டி
அண்மையில் கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட மூதாட்டி ஒருவர் வாகனத்தில் பிணம் ஒன்று இருப்பதைக் கண்டு காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.
முதியவரும் கடத்தல்
இதையடுத்து வாகனத்தை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரர் காய்கறி மூட்டைகளுடன் கடத்தப்பட்ட உடலை கைப்பற்றியதோடு உயிருடன் இருந்த மேலும் ஒரு முதியவரையும் காப்பாற்றினர்.
சுவர்களில் கல்லறை
இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் அங்குள்ள சுவற்றில் உள்ள அறைகளில் வைத்து பதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
ஊடகங்களில் பரவியது
மேலும் உயிரிப்பவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதகாவும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
இறப்பு பதிவு செய்யப்படவில்லை
இதையடுத்து நடைபெற்ற கருணை இல்ல நிர்வாகி தாமஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாள்தோறும் 2 பேர் சராசரியாக உயிரிழப்பதாக தெரிவித்தார். ஆனால் அங்குள்ள விஏஓவிடம் உயிரிழந்தவர்கள் குறித்து கருணை இல்லம் பதிவு செய்யவில்லை என தெரியவந்தது.
மத்திய உளவுத்துறை அதிகாரிகள்
இதையடுத்து அங்கு ஏதோ சட்டவிரோதமாக நடக்கிறது உறுதி செய்யப்பட்ட நிலையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கருணை இல்லத்தின் நிர்வாகி தாமஸிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடுக்கிடும் தகவல்கள்
தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் நிலையில் கருணை இல்லம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. அந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.