சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2015–16–ம் ஆண்டில் 8.79 சதவீதமாக இருந்தது. இது 2016–17–ம் ஆண்டில் 0.86 சதவீதம் குறைந்து 7.93 சதவீதமாக உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பா.ம.க. ஏற்கனவே பலமுறை கூறியிருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.
இந்தியாவில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும் தான் குறைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதோ, உற்பத்தித்துறை வளர்ச்சியை பெருக்குவதோ சாத்தியமல்ல. அதேபோல், பாசன கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வேளாண் துறையையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியாது.
தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஊழலை ஒழித்தல், அரசு நிர்வாகத்தை முற்றிலுமாக சீரமைத்தல் ஆகியவை தான் ஒரே தீர்வாகும். இந்த ஆட்சியில் இதற்கு வாய்ப்பில்லை என்பதால் ஆட்சி மாற்றமும், தொலைநோக்கு கொண்ட புதிய அரசும் தான் தமிழகத்தை முன்னேற்றும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-dailythanthi.com