99.94% பணப்பரிவர்த்தனை! – தோற்றுப் போனதா பணமதிப்பு இழப்பு?

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பணப்பரிவர்த்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, ரூ.1,000 மற்றும் ரூ.500 ஆகியவற்றை செல்லாது என அறிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரம், ஊழல் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு என பல்வேறு காரணங்களை அதற்காக முன்வைத்தார். இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு அதுவே முக்கிய காரணமானது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியின் படி, இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.17.78 லட்சம் கோடி என லைவ்மிண்ட் தகவல் வெளியிட்டது. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் நாட்டில் ரூ.17.97 லட்சம் கோடி ரொக்கப்பணம் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது. பணமதிப்பு இழப்பின் போது ரூ.14.48 லட்சம் கோடி பணம் பொதுமக்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்தத் தகவல்கள் மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு முந்தைய பணப்புழக்கத்தை ஒப்பிடும்போது, தற்போதைய பணப்புழக்க மதிப்பு 99.94% ஆகிறது.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.200 மற்றும் அதற்குக் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அதிகமாக விநியோகிக்கப்பட்டதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதை மக்கள் விரும்பவில்லை அல்லது அவர்களுக்கு அதைப் பற்றிய போதிய அறிவு இல்லை என்பதையே தற்போதைய நிலவரம் உணர்த்துகிறது.


-Nakkheeran.in

TAGS: