இவ்வளவுதான் இந்தியா.. இதுதான் இந்தியா!

சென்னை: ஒவ்வொருவரையும் மனம் வேதனை அடையச் செய்துள்ளது மதுவின் கோர மரணம். கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞரான மது, வெறியர்களால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.

மன நிலை பாதித்தவரான மது சாப்பாட்டுக்காக எடுத்து வைத்திருந்த பொருட்களைப் பார்த்து திருட்டுப் பட்டம் கட்டி கொடூரமாக தாக்கியே கொன்றுள்ளது 15 பேர் கொண்ட கும்பல். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மனதுக்குள் பல கேள்விகளை எழுப்பி நம்மை வெதும்ப வைக்கிறது.

வெறும் வயிற்றுப் பாட்டுக்காக ஒரு உயிரைப் பறித்துள்ளது ஒரு கும்பல். ஆனால் மறுபக்கம் லட்சம் லட்சமாய், கோடி கோடியாய் திருடியவர்கள் ஹாயாக நாட்டை விட்டு பறந்து போய் ஜம்மென்று உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

தட்டிக் கேட்க ஆள் இல்லாதவர்கள்

இந்தியாவை நடு கோடு போட்டு இரண்டாக பிரிக்கலாம். ஏழை இந்தியா, பணக்கார இந்தியா. இதில் இப்போது பணக்கார இந்தியாவின் கைதான் மிகப் பெரிய அளவில் ஓங்கியுள்ளது. இந்த இந்தியாவைச் சேர்ந்தவர்கள் படு ஹேப்பியாக உள்ளனர். இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம். தட்டிக் கேட்க ஆளே இல்லை.

சுருட்டிக் கொண்டு ஓடலாம்

இவர்கள் நாட்டின் வளத்தை (இயற்கை, நதி, தாதுக்கள்) சூறையாடலாம். பொருளாதாரத்தை (வங்கிகள்) சூறையாடலாம். பிறகு தங்களுக்கு விருப்பப்பட்ட நாடுகளுக்கு தப்பி ஓடி அங்கு போய் ஹாயாக டிவீட் செய்தபடி ஹேப்பியாக வாழலாம்.

பரிதாபத்துக்குரிய இந்தியர்கள்

மறுபக்கம் பரிதாபத்துக்குரிய இந்தியர்கள் உள்ளனர். இவர்களுக்கு எதுவும் கிடையாது. இவர்கள் என்ன கேட்டாலும் கிடைக்காது. இவர்கள் என்ன செய்தாலும் அது சட்டவிரோதம். அதிகபட்சமாக இவர்களுக்குக் கிடைப்பது Anti national என்ற பட்டம் மட்டுமே. இவர்கள்தான் இந்த நாட்டை தூக்கிச் சுமப்பவர்கள் என்பதுதான் வேதனையான உண்மை.

மது – நிரவ் கதை

இந்த சந்தர்ப்பத்தில்தான் மதுவின் கதை நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு சில நூறு ரூபாய்கள் மதிப்பு மட்டுமே உடைய பொருட்களை திருடினார் என்பது மது மீதான குற்றச்சாட்டு. அதற்கு அவர் கொடுத்த பரிசு, உயிர். ஆனால் 11,000 கோடியை மோசடி செய்து தலைமறைவாகி விட்ட நிதித் திருடர் நிரவ் மோடிக்கு கிடைத்த பரிசு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியது. இனி அவர் பேச மாட்டார். டிவீட்டுகள்தான் பேசும்.

இன்னும் எத்தனை காலத்திற்கு

இதெல்லாம் ஏதோ ஒரு நிகழ்வு. ஏன் இதையெல்லாம் கோர்த்துப் பார்க்கிறீர்கள் என்று கூறுவார்கள் சிலர். ஆனால் உண்மை அது இல்லை. இன்று சமூகத்தை தாங்கிப் பிடிக்கும் அத்தனை பேரும் பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கு உள்ளாகி உயிரை விட்டுக் கொண்டுள்ளனர். இங்கு பசிக்கும், உணர்வுக்கும், மனிதாபிமானத்திற்கும் மரியாதை இல்லை. பணம் மட்டுமே இங்கு உயர்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறது. அதுதான் இடிக்கிறது.

மதுக்களோடு நிற்பதில்லை

மரித்தது மது மட்டுமல்ல. மரித்துக் கொண்டிருப்பது இந்த நாட்டின் விவசாயம் உள்ளிட்ட சாமானிய மக்களின் உயிர் நாடி அத்தனையுமே. அடித்தளங்கள் எல்லாம் பியூஸ் பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாலாபுறமும் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு மத்தியில்தான் விஜய் மல்லையாக்களும், நிரவ் மோடிகளும், கோத்தாரிகளும், லலித் மோடிக்களும் காய் நகர்த்தி கலகலப்பாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: