புதிய தலைவர்கள் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும், திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு வணக்கம்.
உங்கள் இருவருக்குமான நீண்ட காத்திருப்பிற்குப்பின், இதை எழுத வேண்டியதாய் உணர்ந்தேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் 8வது வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறாள். சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது என்றாலும் நேற்று முன்தினத்தில் இருந்து உங்கள் கருத்துகளுக்காக காத்திருந்தேன். உங்கள் ட்விட்டர் பக்கங்களுக்கு சென்று தேடிப்பார்த்தால் எந்தப் பதிவும் அந்த சிறுமி தொடர்பாக இல்லை. நீங்கள் நடிகர்கள் மட்டும் என்றால் இப்படி காத்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இப்போது நீங்கள் இருவருமே தலைவர்கள். உங்கள் கட்சிகளின் தலைவர்கள்.
இந்த வன்கொடுமை சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியாத அளவுக்கு நீங்கள் இருவரும் தமிழகத்தை விட்டு தூரமாக இல்லை என்று நம்புகிறேன். அதையும் மீறி இந்த சம்பவம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால்… நீங்கள் அரசியல் செய்ய நினைக்கிற தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கும் உங்களுக்குமான தொடர்பை நீங்களே பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.
அதோடு உங்களைச் சுற்றி இருப்பவர்கள், உங்களைச்சுற்றி நீங்கள் வைத்திருப்பவர்கள் இந்த சம்பவத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
கேரளாவில் பசியில் 200 ருபாய் மதிப்புள்ள உணவுப்பொருள்கள் திருடியதற்காக அடித்தே கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் மதுவிற்காக கேரளாவில் உங்களைப்போன்ற உச்ச நட்சத்திரமான மம்முட்டி பேசுகிறார். கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் பேசுகிறார்.
சாதி, மத பேதமற்ற ஆன்மீக அரசியல் என்று சொல்லும் ரஜினிகாந்த் அவர்களே, இடதும் இல்லை வலதும் இல்லை மய்யம் என்று சொல்லும் கமல்ஹாசன் அவர்களே….
14 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து சிதைத்த வன்கொடுமை பற்றிப் பேசுவது… சாதி மத பேதமற்ற ஆன்மிக அரசியலின் எல்லைக்குள் வரவில்லையா? அல்லது வலதுக்கும் இடதுக்கும் இடையிலான மய்யத்திற்குள்ளும் வரவில்லையா? இந்தியர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதியில் ஊறிக் கிடக்கிறார்கள்….
ஒன்று, சாதி உணர்வோடு திரிவது… அதை உயர்த்திப் பிடிப்பது. சாதி வெறியில் கொடூரங்களைச் செய்வது… அல்லது சாதிக்குப்பயந்து நடுங்கி அதை கண்டுகொள்ளாமல் ஓரமாய் ஒதுங்குவது… இதில் பெரியவர், சிறியவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், நடிகர், அரசியல்வாதி, அரசாங்க அதிகாரி, பத்திரிகையாளர் என்று எந்தப்பாகுபாடும் இல்லை.
மாற்று அரசியலோ அல்லது புரட்சி அரசியலோ நீங்கள் செய்ய நினைத்தால் நந்தினிகள் பற்றி பேசுங்கள். நந்தினிகளுக்கு நியாயம் கிடைக்க முன் நில்லுங்கள். முயற்சி செய்யுங்கள். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சமீப காலமாக சாதி வெறியிலும் மத வெறியிலும் பல கொடூரமான கொடுமைகளை அரங்கேற்றுகிறார்கள் இந்தியர்கள். பெண்கள், குழந்தைகள் மீது கூட இரக்கம் காட்டுவதில்லை இந்த வெறியர்கள்.
விழுப்புரம் சிறுமி கூட்டு வன்புணர்வு சிதைப்பு பற்றி அனைவரும் பேசும் போது பெயருக்கு நாமும் கருத்து தெரிவிக்கலாம், அதுவரை அதைக் கண்டும் காணாமல் இருந்துவிடுவோம் என்று சாதிக்குப் பயந்து நீங்களும் மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வீர்களேயானால் உங்கள் அரசியல் எந்த வகையிலும் மாற்றத்தை உருவாக்கப்போவதில்லை. புதிதாகவும் இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒப்புக்கொள்ளுங்கள்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் ஊடக தொடர்பாளர்கள் இதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால் கொண்டு செல்லுங்கள்.
அல்லது… ஆடோ, மாடோ, பல்லியோ, பாம்போ அடிபட்டிருந்தால் அதைப்பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தலாம்…
ஆனால், இது ஒரு சாதாரண தலித் சிறுமிதானே என்று மற்றவர்களைப் போலவே நீங்களும் இதை எடுத்துக்கொண்டாலும் அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை.
இப்படிக்கு,
சக சினிமாக்காரன்,
சக தமிழன்,
சக இந்தியன்,
சக மனிதன்
- முருகன் மந்திரம்