காஷ்மீர்: எல்லையோர கிராம மக்களின் துயர்மிகு கதை

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் ஓர் எல்லையோர கிராமத்தில் வசிக்கிறார் முஹம்மத் யாகூப். அவருக்கு 50 வயது. சமீபத்தில்தான் தன் வீட்டின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பி இருக்கிறார்.

பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களுக்குள் துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்டன. இதன்காரணமாக, யாகூப் குடும்பம் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறினர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் காஷ்மீரின் முழுப்பரப்புக்கும் உரிமை கோருகின்றன. ஆனால், இரண்டு நாடுகளும் சில பகுதிகளை மட்டும்தான் கட்டுப்படுத்துக்கின்றன.

இந்த சர்ச்சை இரு நாடுகளுக்கிடையே இரண்டு போர்களுக்கு வித்திட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு குறித்து ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டி இருந்தாலும், இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டுதான் வருகின்றன. 2013 ஆம் ஆண்டுக்குப்பின் இரண்டு நாடுகளும் தாக்கிக்கொள்வது அதிகரித்தது.

அச்சத்தில் உள்ளனர்

அனைவரும் ஒரு விதமான அச்சத்தில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்கிறார் யாகூப். அரசாங்கம் உரி மாவட்டத்தில் அமைத்துள்ள நிவாரண முகாமில் தற்காலிகமாக வசித்துவருகிறார் அவர்.

மூன்று பக்கமும் நாட்டின் எல்லைப்பகுதி இருக்கும், ஐந்து எல்லை கிராமங்களில் வசிக்கும் பலர், தங்களது வீட்டை விட்டு வெளியேறி நகரத்தில் அடைக்கலம் புக நேரிட்டுள்ளது.

இந்த கிராமங்கள் மோசமான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இதனால் 7,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிபிசியிடம் ஓர் அதிகாரி தெரிவித்தார்.

காஷ்மீர் சிலிகோட் கிராமத்தைசேர்ந்த இந்த பெண், காஷ்மீர் பாரம்பரிய உடைக்குள், பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையை வைத்து எடுத்து செல்கிறார்.

அவர் ஒரு வாகனத்தை நோக்கி விரைவாக ஓடுகிறார். அந்த வாகனம்தான் தாக்குதலிலிருந்து மக்களை காக்க, அவர்களை முகாமுக்கு அழைத்து செல்கிறது.

எல்லையோரத்தில் உள்ள மூன்று கிராமங்களிலிருந்து ஆயிரகணக்கானோர் குடிபெயர்ந்து உள்ளதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் அனைவரும் வெளியேறியதால், மொத்த கிராமமும் மக்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி உள்ளதாக முகாமில் உள்ள கிராம மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

எத்தனை பேர் இந்த தாக்குதலால் காயமுற்றுள்ளனர், எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

முகாமில் உள்ள அனைவரும் தாங்கள் விட்டு வந்த தங்கள் வீடு குறித்து, கால்நடைகள் குறித்து கவலையில் உள்ளனர். சிலர் நாங்கள் எதையும் எங்கள் வீட்டிலிருந்து எடுத்து வரவில்லை. அணிந்திருந்த உடையுடன் வந்தோம் என்கின்றனர்.

நாங்கள் போர்ச் சூழலிலேயே வாழ்ந்து துயரத்தை அனுபவிக்கிறோம் என்கிறார் உரி மாவட்டத்தை சேர்ந்த லால் தின்.

இருதரப்பும், எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் வசிக்கும் மக்களின் நிலைமையை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர். -BBC_Tamil

TAGS: