சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சிறைக்கைதிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பதி அருகே உள்ள ஏரியில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் அண்மையில் இறந்து கிடந்தனர். இவர்கள், செம்மரம் கடத்தியபோது ஆந்திர மாநில போலீசாரால் விரட்டப்பட்டு, ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
மேலும் செம்மரம் கடத்தியதாக கூறி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 500–க்கும் மேற்பட்ட தமிழர்களை, தமிழகத்தில் புகுந்து, ஆந்திர மாநில போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.
சித்ரவதை
தமிழகத்துக்கு வரும் ஆந்திர மாநில போலீசார், தாங்கள் கைது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழக டி.ஜி.பி.க்கு தகவலை முன்கூட்டியே அளிப்பது இல்லை. தமிழர்களை கைது செய்து, முறையாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதும் கிடையாது. அவர்களை சட்டவிரோதமாக வைத்து, ஆந்திர போலீசார் சித்ரவதை செய்கின்றனர்.
எனவே, அத்துமீறி தமிழகத்தில் நுழையும் ஆந்திர மாநில போலீசாரை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-dailythanthi.com