இந்தியாவில் இளம் வயதில் இறந்துபோகும் தலித் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஐ.நா ஆய்வு

இந்தியாவில் உள்ள தலித் பெண்களுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லாததால், சாதி இந்துப் பெண்களை விட இளம் வயதில் இறந்துபோகிறார்கள் என சமீபத்தில் வெளியான ஐ.நா.சபையின் பாலின சமத்துவத்திற்கான அறிக்கை கூறியுள்ளது.

குறிப்பாக, சாதி இந்துப் பெண்களைவிட 14.6 ஆண்டுகள் முன்னதாகவே தலித் பெண்கள் இறந்துபோவதற்கு ,அன்றாட வாழ்வில் அவர்கள் அடிப்படைத் தேவைக்காக சிரமப்படுவது ஒரு காரணம் என ஐநா அறிக்கை கூறுகிறது.

தலித் பெண்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நல்வாழ்வு போன்றவை இல்லாத காரணத்தால் அவர்களின் உயிர் வாழும் காலம் மற்ற சாதிப் பெண்களை விட குறைந்ததாக உள்ளது என்கிறது அந்த அறிக்கை.

‘வாக்குறுதிகளை செயலாக்குதல்: 2030ல் பாலின சமத்துவத்துக்கான செயல்திட்டம்’ என்ற பெயரில் அந்த அறிக்கை வெளியானது.

கழிவறை வசதி இல்லாமல் தவிக்கும் பெண்கள்

தமிழகத்தில் உள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லட்சுமணன், ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல சில கிராமம் மற்றும் நகரங்களில் தலித் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் கழிவறைகள் கட்டுவதற்கு கூட போராட்டம் நடத்தவேண்டிய நிலை உள்ளது என்று கூறினார்.

”அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் சுமந்து வருவது, கழிவறை இல்லாததால், பல பெண்கள் இரவு வரும் வரை காத்திருந்து, வெளிச்சம் இல்லாத இடம் தேடிப் போவது, சுகாதார மையங்கள் தொலைவில் இருப்பது போன்ற காரணங்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல ஏழை தலித் பெண்கள் படிக்கும், அரசு கல்லூரிகளில் கூட முறையான கழிவறை வசதிகள் இல்லை என ஊடகங்களில் செய்தி வெளியான பின்னர்தான் சரிசெய்யப்படுகின்றது,” என்றார் லட்சுமணன்.

”சமீபத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நடத்திய ஆய்வில், தலித் பெண் குழந்தைகள் தங்கியுள்ள ஓர் அரசு விடுதியில், மாதவிடாய் காலங்களில் தண்ணீர் வசதி இல்லாமல், கழிவறை பயன்படுத்தமுடியாமல் அவதிப்படுவதைப் பார்க்கமுடிந்தது.

இரவு நேரங்களில் நாப்கின் துணிகளை ஒரு கூடையில் கொண்டு வந்து குப்பைத்தொட்டியில் போடும் அவலத்தை பார்த்தேன்.

பல ஊர்களில் பொது கழிப்பிடங்களை தலித் மக்கள் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது; அவர்கள் பயன்படுத்தும் நிலையில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதிகள் தொடர்ந்து இருப்பதில்லை,”என கழிவறை வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார் லட்சுமணன்.

அன்றாட வாழக்கையில் தொடரும் தீண்டாமை

பெரும்பாலும் தினக் கூலி வேலை அல்லது அமைப்புசாரா தொழிலாளர்களாக இருப்பதால், உணவு மற்றும் மருத்துவம் போன்றவற்றிலும் பிற சாதிப் பெண்களைக் காட்டிலும், தலித் பெண்கள் போதிய ஊட்டச்சத்துடன் இருப்பதில்லை.

”கல்வி பெற்று முன்னேறுவதில் ஏற்படும் சிக்கல், நல்ல வேலையில் சேர்வதற்குத் தடையாக உள்ளது.

முறையான வேலை இல்லாதாதல், அவர்கள் குறைவான சம்பளத்தில் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், உணவு மற்றும் மருத்துவத்திற்குக் கவனம் கொடுக்கப்படுவதில்லை.

தீண்டாமை என்ற சொல் சட்டரீதியாகப் பாவச்செயல் என்றாலும், அன்றாட வாழ்க்கையில் தீண்டாமை காரணமாக கல்வி, சுகாதரம், பொது இடங்களில் அணுகல் மற்றும் பங்கேற்பு போன்றவை மறுக்கப்படும் தலித் பெண்கள், மற்ற சாதிப் பெண்களை விட இளவயதில் இறந்துபோகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,’ என்று ஆராய்ச்சியாளர் லட்சுமணன் கூறுகிறார். -BBC_Tamil

 

TAGS: