செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது

ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், திருப்பதி – கடப்பா சாலையில் வந்த ஒரு லாரியை சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்றனர்.

அந்த லாரி ஆஞ்சநேயபுரம் வனத்துறை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது. இந்த துரத்தலின்போது, ஊடகத்தினரும் உடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.

அந்த லாரிக்குள் காவல்துறையினர் ஏறி சோதனையிட்டபோது, லாரியின் தார்ப்பாய்க்குள் இருந்த 80 பேர் சிக்கினர்.

இவர்கள் ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்காக செல்வதாகக் கூறி அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அவர்களை விசாரித்தபோது, அவர்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இவர்களிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் படித்தவர்கள் எனக் கூறுகின்றனர்.

இவர்களிடமிருந்து சமையல் செய்வதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி, ஆந்திராவில் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். -BBC_Tamil

TAGS: