இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. கேரளா, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி துபாய், அபுதாபி, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து கடந்தாண்டு இந்தியாவுக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியாவை சேர்ந்த 5 வாலிபர்கள், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் புலனாய்வு அதிகாரிகள் இந்த இளைஞர்களின் செல்போன் உரையாடலை கண்காணித்து வந்த நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 5 இளைஞர்களும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதில், 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரேஹன் அபிதி என்பது தெரியவந்துள்ளது. மற்ற 4 வாலிபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து புலனாய்வு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக விளங்கிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன், பிடிப்பட்ட வாலிபர்கள் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 3 மாதங்களாக அவர்களை தீவிரமாக கண்காணித்தபின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்’’ என்றனர். நாடு கடத்தப்பட்ட 5 பேரிடமும் இந்திய புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
-athirvu.com