சரணடைய வரச்சொல்லி சுட்டுக்கொன்று விட்டனர்.. போலீசார் மீது ரவுடிகளின் உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு

மதுரை: சரணடைய வரச்சொல்லி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக போலீசார் மீது என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை சிக்கந்தர்சாவடியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சென்ற போலீசார் ரவுடிகளை சரண் அடையுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ரவுடிகள் சுட்டுக்கொலை

ஆனால் அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்தனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

இதையடுத்து இருவரின் உடல்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ரவுடிகளின் உறவினர்கள் போலீசார் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

திட்டமிட்டு கொலை

அதாவது போலீசார் திட்டமிட்டு இருவரையும் கொன்று விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.உறவினர்களை பிடித்து வைத்துக்கொண்டு இரண்டு பேரையும் சரணடையுமாறு போலீசார் வற்புறுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

சுட்டுக்கொன்று விட்டனர்

2 ரவுடிகளும் சரணடைந்த பின்னரே உறவினர்களை போலீசார் விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி திட்டமிட்டு இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அனுமதிக்கவில்லை

மேலும் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், உடல்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வாக்குறுதியை மீறி

போலீசார் ஆஜர்படுத்த கூறியதால் தான் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்ததாகவும் அவர்கள் கூறினர். ஆனால் வாக்குறுதியை மீறி இரண்டு பேரையும் போலீசார் சுட்டு கொலை செய்துவிட்டதாகவும் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக்கின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: