காவிரி: அனைத்துக் கட்சியினரை சந்திக்க பிரதமர் மறுப்பு.. அவமானம்… ஸ்டாலின் கொதிப்பு

சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த அவமானம் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அழைப்பை ஏற்று இன்று மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் வந்து ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முதல்வருடன் மேற்கொண்ட ஆலோசனைப் பற்றி கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். துறை ரீதியான அமைச்சரை சந்தியுங்கள் என்று டெல்லியில் இருந்து தகவல் வந்துள்ளதாக முதல்வர் கூறினார்.

ஓபிஎஸ்,எடப்பாடி பழனிச்சாமியை தனியாக சந்திக்கிறார் பிரதமர் மோடி. யார் யாரையோ பிரதமர் தனியாக சந்திக்கிறார். ஆனால் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பது ஏன். இது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் அவமானம்.

சட்டசபையை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினோம். அதற்கு முதல்வர், திங்கட்கிழமை வரை பொறுத்திருப்போம் என்றும் எந்த பதிலும் வராவிட்டால் 8ஆம் தேதியன்று சட்டசபையை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார்.

அதோடு ராஜ்யசபா, லோக்சபா எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினமா செய்யப் போவதாக பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்னோம். திமுக எம்பிக்களும் காவிரி பிரச்சினைக்காக ராஜினாமா செய்யத் தயார் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: