கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி

பெங்களூரு,

கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசு சார்பில் ‘தொலைநோக்கு பார்வை-2025’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

திட்ட ஆலோசனைகள்

இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-

புதிய கர்நாடகத்தை உருவாக்கும் நோக்கத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தொலைநோக்கு பார்வை-2025 என்ற பெயரில் ஒரு புத்தகம் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்து அதன்படி இதில் எதிர்கால திட்ட ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது போல் எதிர்கால திட்டங்களை வகுக்காமல் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாது.

சமத்துவ சமுதாயம்

அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினர். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, விரைவான வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நாங்கள் மக்களுக்கு 165 வாக்குறுதிகளை கொடுத்தோம். அதில் 155 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு பசவண்ணர் பிறந்த நாளான மே மாதம் 13-ந் தேதி நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். பசவண்ணர் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் பாடுபட்டார். அவர் பாராளுமன்ற நடைமுறையை கொண்டு வந்தார். பசவண்ணரின் இந்த கொள்கையில் நாங்கள் நம்பிக்கை வைத்து செயல்படுகிறோம்.

பசியின் அருமை தெரிந்தவர்கள்

அனைவருக்கும் சமூக-பொருளாதாரம், அரசியல் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போது தான் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும். பசி இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அந்த திசையில் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குகிறோம். இதனால் கர்நாடக மக்கள்தொகையில் 4 கோடி பேர் பயன் பெறுகிறார்கள். இந்திரா உணவகங்களை திறந்துள்ளோம்.

இலவசமாக அரிசி கொடுத்தால் மக்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று சிலர் குறை கூறுகிறார்கள். பசியின் அருமை தெரிந்தவர்கள் குறை கூறமாட்டார்கள். தரிசு நிலம் உள்ளவர்கள் பயிர் சாகுபடி செய்ய வசதியாக எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்து உள்ளோம். இதனால் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். கர்நாடகத்தில் வேளாண்மை சந்தைகளில் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகம் செய்தோம். இதனால் விவசாயிகளின் வருமானம் 38 சதவீதம் அதிகரித்து உள்ளது.

பொது சுகாதார காப்பீட்டு திட்டம்

அதிக குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களில் கர்நாடகம் 10-வது இடத்தில் உள்ளது. ஆனால் பா.ஜனதாவினர் பொய் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கர்நாடகம் 2016-ம் ஆண்டு முதல் இடத்தில் இருந்தது. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடுகள் வந்தன. குஜராத் இதில் 50 சதவீதம் கூட எட்டவில்லை.

இந்தியாவிலேயே ‘ஸ்டார்ட்அப்‘ கொள்கையை கர்நாடகம் தான் முதன் முதலாக வகுத்து அறிவித்தது. பொது சுகாதார காப்பீட்டு திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இதன் மூலம் 1.43 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும். அரசு ஆஸ்பத்திரிகளில் கிடைக்காத மருத்துவ வசதிகளுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியும். இதில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர்மட்டம்

கர்நாடகத்தில் அடிக்கடி வறட்சி ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கர்நாடகத்தில் 36 ஆயிரம் ஏரிகளில் நீர் நிரப்ப ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 13 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம்.

தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் இனி ஒரு பைசா கூட கல்வி கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சொந்த தொழில் செய்ய வங்கிகளில் ரூ.190 கோடி வரை மானிய வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் இந்த கடனுக்கு உத்தரவாதமும் மாநில அரசு அளிக்கிறது.

சூரியசக்தி மின் உற்பத்தி

உலகிலேயே ஒரே இடத்தில் 2 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் கர்நாடகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் ஏக்கரில் ரூ.12 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூருவில் 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 260 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

பெங்களூருவில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஜெயச்சந்திரா, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே, தன்வீர்சேட், வினய்குமார், தலைமை செயலாளர் ரத்ன பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தொலைநோக்கு பார்வை குறித்து பள்ளி-கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது முதல்-மந்திரியுடன் மாணவ-மாணவிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

-dailythanthi.com

TAGS: