டெல்லி: காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்துவதற்கு தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலோசனைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அழைப்புவிடுத்துள்ளது.
கடந்த மாதம், தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் தமிழக அனைத்து கட்சி குழுவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்த காவிரி விவகாரத்தில் தொடர்புள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.