புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் உலகின் முன்னணி மாநிலமாகும் தமிழகம் : சிக்கல்களும் சவால்களும்!

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் 2027வாக்கில் மாநிலத்தின் மின் உற்பத்தியில் பாதிக்கும்மேல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்தே கிடைக்கும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. ஆனால், மின்துறை ஆய்வாளர்கள் இது சாத்தியமா என கேள்வியெழுப்புகிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ’இன்ஸ்டிடியூட் ஆஃப் எனர்ஜி எகனாமிக்ஸ் அண்ட் ஃபினான்சியல் அனாலிசிஸ்’ என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. Electricity Transformation in India: A Case Study of Tamilnadu என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இது தொடர்பான ஆய்வறிக்கையானது, தமிழக மின்வாரியத்தின் நிதி நிலையை வைத்துப் பார்க்கும்போது மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ரீதியாகவும் மிக முக்கியமானது.

காற்றாலை மின் உற்பத்தித் திறன்

தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மின் உற்பத்தித் திறனானது 7,850 மெகாவாட் அளவுக்கு உள்ளது. இது, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் உள்ளதைவிட அதிகம். அடுத்த பத்தாண்டுகளில் இந்த உற்பத்தித் திறன் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் இந்த ஆய்வு, மாநிலத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திறனும் ஆறு மடங்கு அதிகரித்து, 13,500 மெகாவாட்டாக உயரும் எனக் கூறுகிறது.

இந்த ஆய்வில் குறிப்பிட்டதைப் போல நடந்தால், தமிழகத்தின் மின் தேவையில் 67 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்தே கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாகவே காற்றாலை மின் உற்பத்தி சாதனங்கள், சூரிய மின்சக்தி சாதனங்களின் விலையும் அவற்றை இயக்கும் செலவும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. விரைவிலேயே அனல் மின் நிலையங்களின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலைக்கு இணையாக புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஆண்டுகள் செல்ல செல்ல அனல் மின்சாரத்தின் விலை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் விலையைப்போல இருமடங்காகும் எனவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சிக்கல்கள்

ஆனால், காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை காற்றாலையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையே கிடைக்கும். ஆனால், அப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்கத் தேவையான கிரிட் வசதிகள் இல்லாத காரணத்தால், காற்றாலைகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

அதேபோல, பற்றாக்குறை காலங்களில் கிரிட் வசதி இல்லாத காரணத்தால், பிற மாநிலங்களிலிருந்து குறைவான விலையில் மின்சாரம் வாங்குவதும் தடைபட்டிருக்கிறது. தற்போது இந்த நிலையை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றாலும் புதிதாக போடப்படும் கிரிட்டானது, தமிழகத்தின் எதிர்காலத் தேவையை ஏதிர்கொள்ளும் வகையில் இருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆனால், மின் துறை நிபுணர்கள் மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து சந்தேகம் எழுப்புகிறார்கள்.

“காற்றாலை, சூரிய ஒளி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் என்பது ஒருபோதும் நமது மின்சாரத் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்யாது. காரணம், அது முழுக்க முழுக்க இயற்கையின் கட்டுப்பாட்டில் இருப்பது.  நாம் தொடர்ந்து தொழில்துறை மற்றும் வர்த்தக ரீதியான மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறோம். மின்சாரத்தை பயன்படுத்தும் முறையை மாற்றாமல் இம்மாதிரியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் முழுமையான பலனைத் தராது. காற்றாலை மின்சாரமெல்லாம் திடீரென 1000 மெகா வாட் அளவுக்குக் குறையும். அப்போது என்ன செய்ய முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத்தின் தலைவரான எஸ். காந்தி.

தமிழகத்தில் தற்போது உள்ள கிரிட்டினால் சுமார் 400 மெகா வாட் அளவுக்கான மின்சார ஏற்ற – இறக்கத்தையே தாங்க முடியும். அதற்கு மேல் மின் உற்பத்தி குறைந்தால், பெரிய அளவில் மின் தடை ஏற்படும்.

நிலையற்ற உற்பத்தி

தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான நாகல்சாமியும் புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்களை முழுமையாக நம்பியிருக்க முடியாது என்கிறார். “காற்றாலை மின்சாரம் infirm power என்ற நிலையற்ற உற்பத்தி வகையைச் சேர்ந்தது. 24 மணி நேரமும் அதிலிருந்து மின்சாரம் கிடைக்குமெனச் சொல்ல முடியாது. காற்றாலைகள் காற்று வீசாமல் நின்றுவிட்டால் கிரிட்டில் பிரச்சனை ஏற்பட்டு, பெரிய அளவில் மின்தடை ஏற்படும்” என்கிறார் அவர்.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை புனல் மின் நிலையங்கள் அதிகம் உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி குறையும்போது உடனடியாக அதாவது 30 நிமிடங்களுக்குள் இந்த நீர் மின் நிலையங்களை இயக்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடுவார்கள். ஆனால், தமிழகத்தில் புனல் மின் நிலையங்கள் மிகக் குறைவு. ஆகவே அவற்றை நம்பியிருக்க முடியாது. அல்லது எரிவாயு மூலம் இயங்கும் மின் நிலையங்கள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 500 மெகாவாட் அளவுக்கே எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பின்னணியில் இப்போதைக்கு அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருக்கத்தான் வேண்டியிருக்கும் என்கிறார் நாகல்சாமி.

தமிழ்நாட்டில் தற்போது அதானி பவர் நிறுவனம் 648 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும்  க்ரீன்கோ நிறுவனம் 150 மெகா வாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும்  என்எல்சிஐஎல் நிறுவனம் 168 மெகாவாட் அளவு திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும் இயக்கிவருகின்றன. ஒட்டுமொத்தமாக 950 மெகாவாட் அளவுக்கு இந்த மின் நிலையங்களின் உற்பத்தித் திறன் உள்ளது. இது தவிர, சில நிறுவனங்களும் வீடுகளும் கூரைகளில் பொறுத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகளின் மூலம் 163 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது இந்தியாவில் கூரைமீது உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியில் 12 சதவீதம். இதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

இவை தவிர, விரைவிலேயே 1260 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள சூரிய மின் நிலையங்கள் தமிழகத்தில் துவங்கப்படவிருக்கின்றன.

ஆனால், சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவதில் நாம் வேறுமாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் எஸ். காந்தி.

“ஒரே இடத்தில் பெரிய அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது பலன் தராது. தனித்தனியாக அவரவர் வீட்டில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய ஊக்கம் தர வேண்டும். இதன் மூலம் மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்பைக் குறைக்க முடியும்.  அல்லது விவசாய நிலங்களில் 10 கிலோ வாட், 5 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் நிலையங்களை அமைத்து, பகல் நேரங்களில் நீரை இறைப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம்” என்கிறார் காந்தி.

காற்று, சூரிய மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரை, அவற்றிலிருந்து மின்சாரம் கிடைக்காத நேரத்தில் என்ன செய்வது என்பது மிக முக்கியமான கேள்வி. “புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பெரிய அளவில் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய கலன்களை உருவாக்கித்தரலாம். ஆனால், அவை மிகவும் செலவுபிடிக்கும். அதுவரை, நாம் இப்போது செய்வதுபோல  மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான அணைகளைக் கட்டியே மின்சாரத்தை சேமிக்க வேண்டும்” என்கிறார் காந்தி.

மின்சார அணை

தமிழகத்தில் தற்போது கடம்பாறை என்ற இடத்தில் மட்டும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான அணை இருக்கிறது. காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும்போது அதனைப் பயன்படுத்தி கீழே உள்ள நீர் மேலே இறைத்து ஊற்றப்படும். மின்சாரம் தேவைப்படும்போது அணை திறக்கப்பட்டு நீர் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும்.  இதுபோல பைக்காரா, சில்லஹல்லா ஆகிய இடங்களிலும் இதுபோல மின்சாரத்தைச் சேமிப்பதற்கான அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

“ஐரோப்பிய நாடுகளில் பல சிறிய அனல் மின் நிலையங்களை 50-60 சதவீதம் அளவுக்கு இயக்கி இந்தப் பிரச்சனையை சமாளிப்பார்கள். ஆனால், அது மிகவும் செலவுபிடிக்கும் காரியம். தமிழகத்தில் அது சாத்தியமா எனத் தெரியவில்லை” என்கிறார் நாகல் சாமி. பொதுவாக அனல் மின் நிலையங்கள் 85 சதவீதம் அளவுக்கு இயங்கினால் மட்டுமே லாபகரமாக இருக்க முடியும்.

இதற்கிடையில், 22,500 மெகாவாட் அளவுக்கு புதிய அனல் மின் நிலையங்களை உருவாக்க தமிழக அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள அனல் மின் நிலையங்களே வெறும் 62 சதவீதம் அளவுக்கே இயங்குகின்றன. ஆகவே புதிய அனல் மின் நிலையங்களை உருவாக்கினால், அவை நிச்சயம் லாபகரமாக இயங்க முடியாது என்கிறது இந்த அறிக்கை. ஆகவே, செய்யூரில் தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் 4,000 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள மிகப் பெரிய அனல் மின் நிலையமானது, லாபம் கிடைக்காது என்ற காரணத்தால் கைவிடப்படக்கூடும் என்கிறது அறிக்கை.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அனல் மின்சாரம், நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகிய அனைத்தையும் பரவலாகப் பயன்படுத்துவதே சிறப்பான வழிமுறையாக இருக்கும் என்கிறது அறிக்கை. தமிழகத்தில் தற்போது உள்ள காற்றாலைகளில் இருக்கும் இயந்திரங்களை மாற்றிவிட்டு சக்தி வாய்ந்த இயந்திரங்களைப் பொறுத்துவதன் மூலம் உற்பத்தித் திறனை இருமடங்காக்க முடியும். அதேபோல, மின்சாரத்தை விநியோகம் செய்வதில் ஏற்படும் இழப்பை பெருமளவு குறைப்பது ஆகியவையும் சேர்ந்தால், வரும்காலத்தில் தமிழகத்தின் மின்சாரத் தேவையை 80 சதவீதம் அளவுக்குப் பூர்த்தி செய்வதோடு, மின்சாரத்தின் விலையையும் குறைக்க முடியும்.  இதன் மூலம் மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்தாமலேயே மின்வாரியத்தின் நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்கிறது அறிக்கை.

“காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் உலகின் முன்னணி இடங்களில் ஒன்றாக இருந்தாலும்  அவை காலாவதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திவருகின்றன. இப்போது அவற்றில் உள்ள டர்பைன்களை மாற்றுவதன் மூலம், மாநிலத்தின் காற்றாலை மின் உற்பத்தியை இரட்டிப்பாக்க முடியும்” என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுகிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த டிம் பக்லே.

அதேபோல இந்தியா மாதிரி ஒரு நாட்டிற்கு அணுசக்தி மின்சாரமும் தேவையில்லை என்கிறது இந்த அறிக்கை. இந்தியாவில் அணுமின் உற்பத்தித் திறனில்,  35 சதவீதம் அதாவது 2,470 மெகா வாட் திறனுள்ள அணு உலைகள் தமிழகத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அணு உலைகளைப் பொறுத்தவரை நிதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அணுமின் நிலையம் வேண்டாம்

“காற்றாலை மின்சாரம், கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து உற்பத்தி செய்வது, சூரிய சக்தி மின்சாரத்தை வீடுகளில் இருந்து உற்பத்தி செய்வதன் மூலமாகவே நாம் புதிய மின் நிலையங்கள் இன்றி சமாளிக்க முடியும். இந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டு அணு மின் நிலையங்களை அமைப்பது தேவையற்றது” பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

பெரும் நஷ்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தைப் (டான்ஜெட்கோ) பொறுத்தவரை, இந்த அறிக்கை ஒரு நல்ல செய்தியையும் சொல்கிறது. 2013-2014ல் டான்ஜெட்கோவின் நஷ்டம் 13,985 கோடி ரூபாயாகும். உதய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, டான்ஜெட்கோவின் இழப்பை மாநில அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், வரும் நிதியாண்டில் டான்ஜெட்கோவிற்கு இழப்பு இருக்காது என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் லாபம் கிடைக்குமென்றும் இந்த அமைப்பு கணக்கிடுகிறது.

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனின் 35 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது. 7 சதவீதம் நீர் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறன், 22,000 மெகா வாட் ஆகும். மின்தேவை சுமார் 13,000 மெகாவாட் அளவுக்கு உள்ளது. 279.27 லட்சம் இணைப்புகளை தமிழக மின் வாரியம் அளித்துள்ளது.  -BBC_Tamil

TAGS: