திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி: நீதி கேட்டு போராடிய மக்கள் மீது போலீஸ் தடியடி

திருச்சி: திருச்சி அருகே போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் புதுத்தெருவை தம்பதியர் ராஜா (என்ற) தர்மராஜ், உஷா (30) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

உஷா 3 மாத காப்பிணி. போலீஸார் கைகாட்டி நிறுத்தாததால், மற்றொரு வாகனத்தில் ஏட்டு காமராஜ் துரத்தி சென்று, தம்பதியர் சென்ற வாகனத்தை எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால், தம்பதியர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

பின்னால் வந்த வேன் ஏறியதில் 3 மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜா பலத்த காயமடைந்தார். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 3,000 க்கும் மேற்பட்டோர் திருச்சி- தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனத்தை எட்டி உதைத்த ஏட்டு காமராஜ் தப்பியோடிவிட்டார்.

சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் 6 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் நின்றன. சிலர் மறைந்திருந்து போலீஸார் மீது கல்வீச்சில் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக போலீஸார் தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

-tamil.oneindia.com

TAGS: