சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 பேர் பூணூல் அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நால்வர் போலீசில் சரணடைந்துள்ளனர். பைக்கில் வந்த சில மர்ம நபர்கள், குறிப்பிட்ட சமுதாய ஆண்களை வழிமறித்து அவர்கள் அணிந்திருந்த பூணூல் கயிற்றை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பூணூல் அறுத்து பைக்கில் தப்பியோர் உருவங்கள் திருவல்லிக்கேணியில் ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
திருவல்லிக்கேணி பகுதி
மொத்தம் 8 பேர் இன்று காலை பைக்குகளில் வந்து ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 பேர் அணிந்திருந்த பூணூல்களை அறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நால்வர் சரண்
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 4 பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். விசாரணையில் அவர்கள் திராவிடர் விடுதலை கழகம் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
திராவிடர் விடுதலை கழகம்
திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ராவணன், உமாபதி, ராஜேஷ், பிரபாகர் ஆகியோர் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அனைவருமே, கருப்பு சட்டை அணிந்தபடியும், பெரியார் படத்துடனான டி ஷர்ட் அணிந்து வந்து சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் தகவல்
பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் முகநூல் பக்கத்தில் நேற்று கருத்து வெளியிடப்பட்டது. அதை இன்று அவர் மறுத்தாலும், நேற்று இரவு திருப்பத்தூரில் பாஜக நிர்வாகியால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக பூணூல்களை அறுத்ததாக சரணடைந்த நால்வரும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.