கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பாஜக கூட்டணியிடம் பெரும் தோல்வியை தழுவியது. தன்பூர் தொகுதியில் போட்டியிட்ட மாணிக் சர்க்கார் 22,176 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்திருந்தாலும், மொத்தம் 60 தொகுதிகளில் 16 தொகுதிகளை மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியால் கைப்பற்ற முடிந்தது.

இதுவரை ஒற்றை இலக்கங்களில் வெற்றி பெற்றுவந்த பாஜகவுக்கு இது இமாலய சாதனையாக கருதப்படுகிறது. லெனின் சிலை தகர்ப்பு, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் சூறை என பாஜகவின் வெற்றி கொண்டாட்டங்கள் அத்துமீறிய நிலையில், மாநில முதல்வரை அறிவித்து பதற்றத்தை லேசாக தணித்தது பாஜக தலைமை.

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக 48 வயதாகும் பிப்லாப் குமார் தேப் அறிவிக்கப்பட்டார்.

நாளை (வெள்ளிக்கிழமை) திரிபுரா மாநிலத்தின் முதல்வராக அதிகாரபூர்வாமாக பதவியேற்கவுள்ளார் பிப்லாப் குமார் தேப். இச்சூழலில், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் சாரணி பகுதியில் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு கட்சி தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் இருக்கும் அறையில் அவரும், அவரது துணைவியாரும் குடிபெயர்ந்தனர்.

முன்னாள் முதல்வர் என்ற முறையில் மாணிக் சர்க்காருக்கு ஒரு அரசு இல்லம், உதவியாளர், பல்நோக்கு ஊழியர் மற்றும் ஒரு காவலர் என பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் நிராகரித்துவிட்டு திரிபுரா தலைநகர் அகர்தலாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு நேற்று மதியம் அவர் குடியேறினார்.

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு மாணிக் சர்க்கார் குடியேற வந்தபோது, அவரிடம் சில தனிப்பட்ட உடமைகளும், சில புத்தகங்களும் இருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் இந்தியாவில் உள்ள பணக்கார முதல்வர்கள் பற்றி வெளியான ஓர் ஆய்வில், 177 கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு முதல் இடத்திலும், 27 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கடைசி இடத்திலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது மாணிக் சர்க்கார் தாக்கல் செய்திருந்த உறுதிமொழி பத்திரத்தில், கையில் ரொக்கமாக 1,080 ரூபாய் இருப்பதாகவும், வங்கியில் 9,720 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தின் முதல்வராக இருந்த மாணிக் சர்க்காருக்கு தனக்கென சொந்தமாக ஒரு காரோ, வீடோ கூட இல்லை. முதல்வராக இருந்தபோது அரசு வழங்கும் சம்பளத்தை அப்படியே கட்சிக்கு கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கும் ஐந்தாயிரம் ரூபாயில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

மாணிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவுக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுள்ளது. தற்போது அங்கு கட்டுமானம் நடைபெற்று வருவதால் கூடிய விரைவில் இருவரும் அங்கு குடிபெயரலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். -BBC_Tamil

TAGS: