பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்திற்கு வழங்கும் காவிரி நீர் அளவு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு சாதகமான ஒரு அம்சமும் உள்ளது.
அதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு ஏற்கனவே கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாக இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த சட்டசபை மற்றும் மேலவை குழு தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவுக்கு சம்மதம் இல்லை என்று அனைத்துக் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர். இதையேற்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு பதிலடியாக கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் இவவாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கர்நாடகா மதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.