போலீஸ்: மக்களின் எமனா? காவலனா?

திருச்சியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற, ராஜா என்பவரின் இரு சக்கர வாகனத்தைத் துரத்திச் சென்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ராஜாவின் மனைவி உஷா மரணம் அடைந்தது பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உஷாவின் மரணத்தைத் தொடர்ந்து, தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் பொதுமக்கள் தன்னெழுச்சியாகக் கூடி நடத்திய போராட்டத்தை, தடியடி நடத்தித்தான் காவல் துறையால் கலைக்க முடிந்தது.

காவல் அதிகாரி துரத்திச்சென்றபோது ஏற்பட்ட விபத்தித்தால் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், அவர் உதைத்தாரா இல்லையா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

காமராஜ் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தாலும், காவல் துறையைச் சேர்ந்த சிலர் பொதுமக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவமும் பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் இத்தகைய பிரச்சனைகளுக்குக் காரணம் ஊழல் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடலாம் என்கிறார்.

“ஊழல்வாதிகள் உயர் பதவிக்கு வந்தால், அடக்குமுறை மூலம் மட்டுமே அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால் மேலிருந்து கீழ்வரை அனைவரும் பாதுகாக்கப்படுகிறார்கள். எனவே ஒரு காவலர், தலைமைக்காவலர், ஆய்வாளர் என அனைவரும் தங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதை முறைகேடாகப் பயன்படுத்தவே முயல்கிறார்கள்,” என்கிறார் தேவசகாயம்.

“மதுவிலக்குக்காக போராட்டம் நடத்திய பெண்ணை பொது இடத்தில வைத்து அறைந்த உதவி காவல் கண்காணிப்பாளருக்கு அடுத்த சில மாதங்களிலேயே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அத்தகைய அதிகாரிகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல்வாதிகளுடன் அவர்களுக்கு உள்ள தொடர்புதான் காரணம்,” என்கிறார் அவர்.

கைது மட்டும் போதாது

“இத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பினால் மட்டும் போதாது. உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவசரகால விசாரணை நடத்தி, அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை உள்ளது. இரண்டு, மூன்று பேர் அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டால், பிறர் இவ்வாறு நடந்துகொள்வதைத் தவிர்ப்பார்கள்,” என்று கூறுகிறார் அவர்.

காவல் துறையினருக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்று அவ்வப்போது வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டபோது, பயிற்சியின்போது கற்றுக்கொண்டவற்றை அமல்படுத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாதபோது, பயிற்சிகளால் என்ன பலன் அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் தேவசகாயம்.

“முன்பு மாவட்ட ஆட்சியருக்கே மாவட்டம் முழுமைக்குமான நிர்வாக நடுவர் அதிகாரம் இருந்தது, தற்போது காவல் ஆணையரகம் உள்ள மாநகரங்களில், அந்த மாநகருக்கான நிர்வாக நடுவர் அதிகாரம் காவல் துறை ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளிடமே அத்தகைய அதிகாரங்கள் இருந்தால் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும். பழைய முறையே அமல்படுத்தப்பட வேண்டும்,” என்று நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய வலியுறுத்துகிறார் தேவசகாயம்.

‘அதிகாரம் – வரம்பு மீறிய உணர்வுகளுக்கான வடிகால்’

பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் அசோகன், பாதியில் கைவிடப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வை மேற்கோள் காட்டினார்.

“ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர்கள் குழுவை வைத்து இரண்டு வாரங்களுக்கு ஓர் ஆய்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது. அந்த ஆய்வில் ஒரே பின்புலம், கலாசாரம், அறிவுத் திறன் ஆகியவை உடைய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தக் குழுவில் ஒரு பாதி மாணவர்கள் சிறைக் கைதிகளாகவும், மறு பாதி மாணவர்கள் சிறைக் காவலர்களாகவும் நடித்தனர்.”

“ஆனால், அந்த ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், காவலர்களாக நடித்த மாணவர்கள் கைதிகளாக நடித்த மாணவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை செலுத்தி, அவர்களை உடல் ரீதியாகத் தாக்கி இன்பம் கண்டனர். அதிகாரம் தங்கள் கிடைக்கும்போது, அதை வரம்பு மீறிய தங்கள் உணர்வுகளுக்கான வடிகாலாகப் பார்க்கும் மனநிலையே இதற்குக் காரணம்,” என்கிறார் அவர்.

ஒரு வேளை அந்த அதிகாரி உதைக்காமல், வண்டியை ஓட்டிச்சென்றவரே பதற்றத்தில் கீழே விழுந்து, அங்கு கூடியிருந்தவர்களால் காவல் அதிகாரியால்தான் அவர் தள்ளிவிடப்பட்டார் என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாமே, என்ற கேள்விக்கு கும்பலாக சேரும்போது மனிதர்களிடம் உளவியல் மாற்றம் வருவது இயல்புதான் என்கிறார் அசோகன்.

‘காவல் துறையினர் அச்சத்துடன்தான் பணியாற்றுகின்றனர்’

ஓய்வுபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் தில்லைநாயகம் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும்போது, ” ஒரு பெண் அமர்ந்திருக்கும் வாகனத்தைத் துரத்திச்சென்று தாக்குவது என்பது நம்பும் வகையில் இல்லை. இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்றவர் பதற்றத்தில் நிலை தடுமாறி விழுந்திருக்கலாம்,” என்று கூறினார்.

“காவல் துறை குறித்து ஊடகம் உருவாக்கியுள்ள பிம்பத்தாலும், காவல் துறையில் உள்ள சில தவறான நபர்களின் நடத்தையாலும் அவர்களே பதற்றத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்திருந்தாலும், காவல் அதிகாரி உதைத்துத்தான் விபத்து நிகழ்ந்ததாக கருதப்படலாம்,” என்கிறார் தில்லைநாயகம்.

“மனித உரிமை, ஊடகம் உள்ளிட்டவை வலுவடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் காவல் துறையினர் அச்சத்துடன்தான் பணியாற்றுகின்றனர். மன அழுத்தத்தை குறைக்க வழங்கப்படும் பயிற்சிகளும் பலன் அளிப்பதில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் அரசியல் கட்சிகள் மற்றும் சாதிச் சங்கங்களின் எண்ணிக்கையால் காவல் துறை மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

-BBC_Tamil

TAGS: