காதலின் பெயரால் நடக்கும் கொலைக்குப் பின் உள்ள உளவியல் என்ன?

சென்னையில், பி.காம் படித்து வந்த அஸ்வினி என்ற கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில் அழகேசன் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வினோதினி, சுவாதி, விழுப்புரம் நவீனா, வேளச்சேரி இந்துஜா, சோனாலி என காதல் பெயரால் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் என்ன?

பெண்கள் மீதான வன்முறை இயல்பான ஒன்று என்பது போலதான் இன்றைய சமூக கட்டமைப்பு உள்ளது என்கிறார் சமூக செயற்பாட்டாளரான கீதா நாராயணன்.

”தொழில்நுட்பம், பொருளாதாரம், விஞ்ஞானம், என சமூகம் வளர்ச்சியடைந்தபோதிலும், பெண்கள் மீதான பார்வைகள் மாறவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையின் வடிவங்கள் மாறியுள்ளனவே தவிர, இன்னும் வேர்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை” என்கிறர் அவர்.

எது காதல், எது ஈர்ப்பு, எது அன்பு, எது நட்பு என்பதை இளைஞர்கள் பிரித்து பார்க்க கற்றுக்கொடுக்க இச்சமூகம் தவறிவிட்டது என கருதுகிறார் கீதா.

”சிறிதாக புன்னகை செய்தாலும், ஒன்றாக காஃபி குடித்தாலும், நெருக்கமான நட்பு வைத்திருந்தாலும் காதல் என நினைத்துக்கொள்ளும் அளவிற்கு சொல்லிக்கொடுத்தே இளைஞர்களை வளர்த்து வைத்துள்ளோம்.” என்கிறார் அவர்.

மேலும் அவர், ”தான் காதலித்தவர், தனக்குச் சரியில்லை எனத் தெரியும் போது, பிரிந்து செல்லும் சுதந்திரத்தை இச்சமூகம் பெண்களுக்கு அளிக்கவில்லை. இதுவே வன்முறைக்குக் காரணமாக உள்ளது” என்கிறார் கீதா.

நிராகரிப்பையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஆண்கள் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

”ஆண்மை, ஆளுமை, அதிகாரம் என்பதை பற்றி சொல்லிச் சொல்லியே ஆண்கள் வளர்க்கப்படுகின்றனர். ஒரு பெண்ணிடம் உள்ள நிராகரிப்பையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெரும்பாலான ஆண்களுக்கு இல்லை. ஆண்களின் மனநிலை மாற்றத்தை வீட்டிலிருந்தும் பள்ளிக்கூடத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் ஏற்படுத்த வேண்டும் ” என்கிறார்.

”தாராளமய சமூகத்தில், காதல் என்பது ஆடம்பரமான ஒன்றாக மாறிவிட்டது. தனது காதலை வெளிப்படுத்த வேண்டும் என்றால் கூட அதிகளவு பணம் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பொருளாதாரக் கட்டமைப்பும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முக்கிய காரணியாக உள்ளது” என்கிறார் கீதா.

பள்ளிக்கூடத்தில் பாலியல் கல்வியைக் கட்டாயமாக்குவதன் மூலமும், பொறுப்பற்ற விதத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களை தடுப்பதன் மூலமும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முடியும் என்றார் அவர்.

காதல் தோல்வியை சந்திக்கும் அனைத்து ஆண்களும், வன்முறை முடிவை எடுப்பதில்லை. அடிமைத்தனமாக, முட்டாள்தனமாக காதலிக்கும் ஆண்களே இது போன்ற முடிவை எடுக்கின்றனர் என்கிறார் உளவியல் ஆலோசகரான ராஜராஜேஸ்வரி.

”தங்கள் காதல், இருவருக்கும் சரிவராது எனத் தெரிந்தாலும், அடிமைத்தனத்துடனும், முட்டாள் தனத்துடன் காதல் செய்தவர்களால் பிரிய முடியாது. ஒருவரால் நிராகரிக்கப்படும்போது, தன் மீது என்ன தவறு என்பதை ஆராயாமல், இவ்வளவு பணம் செலவழித்த தான் ஏமாற்றப்பட்டதாகவும், பயன்படுத்தப்பட்டதாகவும், நிராகரிக்கப்பட்டதாகவும் உணருகிறார்கள். இதனால், தனக்கு கிடைத்தாத பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்“ என்கிறார் அவர்.

இந்த சமூக வலைத்தள காலத்தில் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதும். பிரிவு ஏற்படுவதும் இயல்பான ஒன்று என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என கூறுகிறார் அவர்.

சமீப காலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்குத் திரைப்படங்களில் தாக்கம் முக்கியமானது என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இது குறித்து அறம் திரைப்படத்தின் இயக்குநர் கோபி நயினார்,” இது சினிமாத் துறையின் தவறு அல்ல. இத்துறையில் இருக்கும் மனிதர்களின் தவறு. திரைப்படத்துக்கு உள்ளே இருக்கும் மனிதர்களின் குணங்கள், சினிமாவில் பிரதிபலிக்கின்றது. வெகுஜன ஊடகமான சினிமாவில் காட்டப்படும் விஷயங்கள், பொது சமூகத்தின் குணமாக மாறிவிடுகிறது. இதுவே சினிமாவின் உளவியல்” என்கிறார்.

ஆணாதிக்க சிந்தனையும், பெண்களுக்கு எதிரான பார்வையும் சமூகத்தில் மாறவில்லை என்றால், திரைப்படத்தில் மாற்றம் ஏற்படுவதும் கடினம் என்கிறார் கோபி. -BBC_Tamil

TAGS: