உ.பி. மருத்துவமனையில் நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்!

ஜான்சி,

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி வழங்க மறுப்பது, கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பது மற்றும் லஞ்சம் போன்ற மோசமான சம்பவங்கள், மருத்துவ அலட்சியங்கள் செய்தியாவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இப்போது உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று செய்தியாகி வெளியாகி உள்ளது.

அதாவது விபத்தில் காயம் அடைந்து பாதிக்கப்பட்ட நோயாளின் துண்டிக்கப்பட்ட காலை அவருக்கு தலையணையாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.

ஜான்சியில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் அங்குள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இடதுகால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை நடந்து உள்ளது. அப்போது அவருடைய இடதுகாலை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் மற்றொரு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது அவருடைய தலைக்கு தலையணை வைக்காமல் மருத்துவர்கள் அவருடைய துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக வைத்து உள்ளனர். தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காகதான் கால் அகற்றப்பட்டது என கூறப்படுகிறது.

இதுதொடர்பான செய்திகள் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்தி வெளிஉலகிற்கு தெரியவந்ததும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சாத்னா கவுசிக், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.

அவர் பேசுகையில், “பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. நோயாளின் தலைப்பகுதியை உயர்த்துவதற்கு டாக்டர்கள் ஏதாவது கிடைக்குமா என பார்த்து உள்ளனர். பின்னர் நோயாளியின் கால் அதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ள நாங்கள் குழு ஒன்றை அமைத்து உள்ளோம். இதில் எங்களுடைய பணியாளர்கள் தவறு செய்து இருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்,” என கூறிஉள்ளார். இதில் முதல்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல் கிடைக்கப்பெற்றதும் மாநில அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறிஉள்ளார்.

-dailythanthi.com

TAGS: