தேனி,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் போடியில் இருந்து குரங்கணிக்கு பஸ், ஜீப் போன்ற வாகனங்களில் வருகின்றனர். பின்னர் அங்கு இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக டாப்ஸ்டேசனுக்கு மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி தற்போது வரை 15 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதி நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் வனத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குரங்கணி பகுதியில் இருந்து கொழுக்குமலை பகுதி வரை சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக மலையேற்ற பயிற்சிக்கு செல்லும் மலைப்பாதையை ஒட்டிய பகுதியில் தான் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்க்கும் போது தீயினால் நீண்ட சாலை அமைத்ததை போல தெரிகிறது. பாதையில் காட்டுத்தீ எரிவதால் மீட்புக்குழுவினரால் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-dailythanthi.com