ராகுல் மன்னித்து விட்டதால் பேரறிவாளன் விடுதலையாவார்- பெற்றோர் பேட்டி..

சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:-

என மகன் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, சோனியா கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார். அவரது குடும்பத்தினரும் அதையே விரும்புவதாக சோனியா கூறினார்.

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி மகன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறியுள்ளது சற்று மன நிறைவை தந்துள்ளது.

ஆனாலும் காலதாமதமாக கருத்து கூறி இருப்பதால் எனக்குள் இருந்த வருத்தம் குறையவில்லை. இதுபற்றி முன்பாகவே ராகுல்காந்தி கூறி இருக்கலாம். ஏனெனில், வாழ்வு என்பது சாதாரணமானவை அல்ல. எனது மகனின் இளமை போய்விட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்பில்லை என்பதில் பேரறிவாளன் உறுதியோடு இருக்கிறார். 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளை விடுவிக்கலாம் என்று கூறிய பா.ஜ.க. அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய மறுக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து பேசியுள்ளார். பிரியங்கா என்ன பேசினார் என்பது நளினிக்கு தான் தெரியும்.

இந்த நிலையில் வெளிப்படையாக ராகுல் காந்தி தற்போது கூறி இருப்பதை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ராகுல்காந்தி கருத்து பேரறிவாளன் விடுதலைக்கு பெரிய பலமாக அமைந்துள்ளதால் நானும் வரவேற்கிறேன்.

பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனே ஆவண செய்ய வேண்டும் என்றார்.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கூறியதாவது:- ராகுல்காந்தி கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் எனது மகன் இளமை இழந்துவிட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகனுக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியின் மகனான ராகுல்காந்தியே மன்னித்து விட்டதாக கூறியுள்ளதால், விரைவில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

-athirvu.com

TAGS: