மும்பையை அடைந்தது விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி; பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு அழைப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கி பயணிக்க தொடங்கிய விவசாயிகள் இன்று காலை மும்பை வந்தடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘பாரதிய கிசான் சபா’ என்னும் விவசாயிகள் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரையிலான ஒரு நீண்ட பேரணியை கடந்த செவ்வாயன்று சில நூறு விவசாயிகளுடன் தொடங்கியது.

பிறகு, மும்பையை நோக்கிய விவசாயிகளின் பேரணியில் வழியெங்கும் மற்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாது பழங்குடியினரும் இணையத் தொடங்கியதால் இறுதியில் அந்த எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த பேரணியில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகளாவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே, நிலவுரிமை, கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்தி இப்பேரணியில் பங்கேற்றுள்ளனர் விவசாயிகள்.

தற்போதைய நிலவரப்படி மும்பையை வந்தடைந்துள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்குள்ள ஆசாத் மைதானத்தில் குழுமியுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த மாநில அரசு

ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாநில தலைநகரான மும்பையில் குழுமியுள்ளதால் அந்நகரமே முடங்கிப்போயுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அம்மாநில அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், மதியம் 2 மணியளவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நிதித்துறை, வேளாண்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்கள், அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது. -BBC_Tamil

TAGS: