மும்பை: விவசாயிகள் கோரிக்கைகள் ஏற்பு: போராட்டம் வாபஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நாசிக்கிலிருந்து மும்பை வரை நீண்ட பேரணி நடத்திய மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

”விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இது குறித்து அவர்களுக்கு எழுத்து பூர்வமாக ஒரு கடிதத்தையும் அளித்துள்ளோம்” என்று மகாராஷ்டிர மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பிபிசியிடம் கூறினார்.

வன பகுதி நிலங்களை விவசாயிகளுக்கு மாற்றும் உரிமை தொடர்பான பிரச்சனை ஆறு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்று தெரிவித்த மாநில அரசு, விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் கடன்களை ரத்து செய்வது தொடர்பான பிரச்சனை பற்றி பேச ‘அகில் பாரதிய கிசான் சபா’ அமைப்பின் இரு பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஒரு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கி பயணிக்க தொடங்கிய விவசாயிகள் இன்று காலை மும்பை வந்தடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘பாரதிய கிசான் சபா’ என்னும் விவசாயிகள் அமைப்பு நாசிக் முதல் மும்பை வரையிலான ஒரு நீண்ட பேரணியை கடந்த செவ்வாயன்று சில நூறு விவசாயிகளுடன் தொடங்கியது. -BBC_Tamil

TAGS: