சென்னை: தேனி குரங்கணி காட்டுக்குள் அனுமதி பெற்றுத்தான் சென்றோம் என்று சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்து இருக்கிறது. தேனி குரங்கணி காட்டு தீ காரணமாக மொத்தம் 11 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மலை ஏற்றத்திற்கு சென்னை டிரெக்கிங் கிளப் என்ற நிறுவனம்தான் ஏற்பாடு செய்து இருக்கிறது. சென்னை டிரெக்கிங் கிளப் பீட்டர் வேன் கெயிட் என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த நபரால் தொடங்கப்பட்டது. முதலில் மிகவும் சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்டது.
வருத்தம்
தற்போது இந்த சம்பவம் குறித்து சென்னை டிரெக்கிங் கிளப் தனது பேஸ்புக் பதிவில் விளக்கம் அளித்து இருக்கிறது. குரங்கணி சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் அனுபவமிக்கவர்களுடன் சென்றும் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.
அனுமதி வாங்கினோம்
மேலும் ”நாங்கள் ஏற்கனவே அந்த காட்டிற்குள் சென்று இருக்கிறோம். எப்போதும் போலத்தான் அப்போதும் வனத்துறையிடம் அனுமதி வாங்கி, முறையான கட்டணம் செலுத்தி சென்றோம். மார்ச் 10ம் தேதி நாங்கள் காட்டுக்குள் எங்கள் குழுவுடன் சென்றோம்” என்றுள்ளார்.
முதலில் இல்லை
நாங்கள் காட்டுக்குள் சென்ற போது அங்கு கொஞ்சம் கூட தீ இல்லை. நாங்கள் விசாரித்துவிட்டுத்தான் சென்றோம். மறுநாள் 11ம் தேதி திரும்பி வந்தோம். நாங்கள் பாதி வழி வரும் வரை எந்த பிரச்சனையும் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
விவசாயிகள்தான் காரணம்
இந்த நிலையில் ”ஆனால் மலை பகுதியில் விவசாயிகள் புற்களை எரித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு இருந்த கால நிலை காற்று காரணமாக தீ பரவ ஆரம்பித்துவிட்டது. அந்த மலை முழுக்க தீ பரவியது. இதுதான் பிரச்சனை” என்றுள்ளார்.
பெண்களுக்கானது
இந்த மலையேற்றம் மகளிர் தினத்திற்காக கொண்டாடப்பட்டது. அதனால் திவ்யா, நிஷா என்ற இரண்டு பெண்கள் இந்த குழுவை வழிநடத்தினார்கள். இவர்கள் அனுபவம் மிக்கவர்கள். அருண், விபின் என்ற அனுபவம் மிக்கவர்கள் அவர்களுடன் சென்றனர். இவர்கள் இருவருக்கும் 7 வருட மலையேற்ற அனுபவம் இருக்கிறது.
எதிர்பார்க்கவில்லை
அனுபவம்மிக்கவர்களை அழைத்து சென்றும் அசம்பாவிதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அருண், திவ்யா முத்துக்குமரன், விபின் ஆகியோர் இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை. அவர்கள் பல உயிரை காப்பாற்ற சென்று மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
முழு விளக்கம்
மேலும் சென்னை டிரெக்கிங் கிளப் எப்படிப்பட்டது என்று விளக்கம் அளித்து இருக்கிறார்கள். 10 வருடமாக என்ன மாதிரியான நல்ல செயல்களை செய்து இருக்கிறார்கள் என்று பேஸ்புக் பதிவில் விளக்கம் அளித்துள்ளனர்.