சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் 2 பெட்டலங்கள் இருந்தன. அதில் 2 தங்கச்சங்கிலிகள் இருந்ததை கண்டனர். இவை ஒரு கிலோ 750 கிராம் எடை கொண்டவை.

மேலும் விமானத்தில் இருந்த ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ 250 கிராம் தங்கக்கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை வந்த இந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்து உள்நாட்டு பயணியாக கடத்தி செல்ல முயன்று இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த பயணி யார்? என்றும், இது சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசையா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த சையத் கரீம் (வயது 63) என்பவரிடம் இருந்து 173 கிராம் தங்கக்கட்டிகளையும், சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த பக்ரூதீன்(30) என்பவரிடம் இருந்து 233 கிராம் தங்கக்கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெபீர்அகமது(38) என்பவர் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3,500 யூரோ கரன்சிகளை வைத்திருந்தார். அதனை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

அதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னையை சேர்ந்த அமீர்காஜா(35) என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் இந்திய பணத்தை கைப்பற்றினார்கள். இது ஹவாலா பணமா? என்று சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-dailythanthi.com

TAGS: