முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பபெறக்கோரி நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை மறுவிசாரணை செய்து, தம்மை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, பேரறிவாளன் வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்று அவர் மீது அவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிராமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
பேரறிவாளனிடம் தான் விசாரிக்கும்போது, தாணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டுக்கு தான் இரண்டு பேட்டரி வழங்கியதாக பேரறிவாளன் கூறினார் என்று அதில் தியாகராஜன் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதை சி.பி.ஐ வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார்.
ஆனால், அந்த பேட்டரியை வழங்கியபோது, அவற்றை என்ன காரணத்திற்காக பயன்படுத்தப்படும் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் தம்மிடம் தெரிவித்திருந்தாக தியாகராஜன் அதில் கூறியிருந்தார்.
பேரறிவாளன் வழங்கிய பேட்டரிகள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பது பற்றிய காரணம் தெரியாமல் வழங்கப்பட்டுள்ளதால், இந்த சதித்திட்டத்தில் அவருக்கு பங்கிருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதுகுறித்து விளக்கமாக நீதிமன்றத்திடம் தாம் தெரிவிக்கவில்லை என்றும் தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த வழங்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததன் அடிப்படையில் மட்டும் அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பதால் தியாகராஜன் தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரத்தின் அடிப்படையில் மட்டும் அந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான தமது தொடர்பு, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதற்கு முந்தைய தினமான மே 20, 1991 அன்று சிவராசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டது உள்ளிட்டவற்றை தனது வாக்குமூலத்தில் பேரறிவாளன் கூறியுள்ளது உள்ளிட்டவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தியாகராஜன் தாக்கல் செய்த பிராமாணப் பத்திரம் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் எனும் உள்நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்றும், ராஜன் எனும் பெயரில் ரசீது பெற்று பேரறிவாளன் இரண்டு ஒன்பது வால்ட் திறனுடைய பேட்டரி வாங்கிக்கொடுத்து மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அம்சங்களும் இந்த வழக்கில் கருத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். -BBC_Tamil