‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ – அண்ணா சொன்னது இன்றும் பொருந்துகிறதா?

வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

“மத்திய அரசால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற கூற்று சரியா? பலவீனமான மாநிலங்களுக்கு கூடுதலாக வரிப்பணம் செலவழிக்கப்பட வேண்டுமா?” என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

“ஆந்திர அரசின் நிதி நிலை பின்னடைவு என்பது ஆந்திர தெலுங்கானா மாநிலங்களின் வரி வருவாய் மாவட்ட பிரிவினைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக பிரச்சனைதான்!” என்று கூறியுள்ள வேலு எனும் பிபிசி தமிழ் நேயர் “இந்தியாவை பொறுத்தவரை வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் கல்வி மற்றும் உட்கட்டமைப்பில் மிகவும் பின் தங்கி உள்ளதால் இயல்பாகவே அதற்கு நிதி சற்று அதிகமாக ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருப்பது உண்மைதான்!. இதற்காக மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்ற கருத்தை முற்றிலும் நிராகரித்து விடவும் முடியாது,” என்றும் பதிவிட்டுள்ளார்.

“நிச்சயமாக மத்திய அரசு வடமாநிலங்களுக்கே அதிக நிதியை ஒதுக்குகிறது அவர்களுக்கு தென்மாநிலங்களில் வாய்ப்பேயில்லை என்பதால்தான் நியாயமான நிதியை ஒதுக்குவதில்லை,” என்கிறார் நிசார் அகமது.

புண்ணியகோடி சேது எனும் நேயர் இவ்வாறு கூறியுள்ளார்,”இது இன்று ஒலிக்கும் நாயுடுவின் குரல் அல்ல , பேராசிரியர் பெருந்தகை அண்ணா அன்றே கூறியதுதான் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று. தென்னிந்தியாவை முற்றிலுமாக புறந்தள்ளி வடஇந்திய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது ஏனெனில் மத்தியில் ஆட்சி அமைக்க போதுமான எம்பிக்களை பெற்றுவிடலாம் என்பதற்காகவே!!!.தென்னிந்தியாவில் சித்தாந்த செயல்பாட்டு ரீதியான மாநில கட்சிகளின் முக்கியத்துவம் அகில இந்திய கட்சிகளுக்கு இல்லை என்பதே.”

“இந்தி. சமஸ்கிரதம் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தெரியவில்லையா இது யாருக்கான அரசு என்று,” என்று கூறுகிறார் சுரேஷ்குமார் எனும் பிபிசி தமிழ் நேயர்.

TAGS: