காவிரி மேலாண்மை வாரியம்: சட்டசபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பின்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் தமிழகத்திற்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஒரு திட்ட அமைப்பு தான் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அரசை கண்டித்து திமுக இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டசபையில் முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தின் போது கூறியதாவது :

காவிரி நதிநீர் பிரச்னை காவிரி டெல்டா விவசாயிகள் வாழ்வாதார பிரச்னையாக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

இந்த அமைப்புகள் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்புகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பின் படியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அமைப்பாக 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும். இந்த தீர்மானத்தை சட்டசபை உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

tamil.oneindia.com

TAGS: