ஈரோடு: தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தால் திமுக ஆதரிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக தென்மாநிலங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் குரல் கொடுத்து வருகின்றன. தென் மாநிலங்களின் வரி வருவாயை கொண்டு வடமாநிலங்களை வளப்படுத்துகிறது மத்திய அரசு என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கேரளாவில் ஏற்கனவே திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. கர்நாடகாவில் இந்தி திணிப்புக்கு எதிராகவும் நாம் இந்துக்கள் என்பதற்கு எதிராகவும் கிளர்ச்சி குரல்கள் கேட்கின்றன. தெலுங்கானாவில் இருந்து, பாஜக- காங்கிரஸ் அல்லாத 3-வது அணி என்கிற முழக்கம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம், தென்மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கின்றனவே என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்டாலின், தென் மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்தால் ஆதரிப்போம் என்றார்.