டெல்லி: இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கி 4 வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு இதுவரை வாய்திறக்காமல் அமைதி காத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் கடந்த 11 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அதிமுக எம்பிக்களை சந்தித்தனர். அப்போது இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர்.