ரத யாத்திரைக்கு அனுமதி – ’யாருக்கு சாமரம் வீசுகிறது அரசு?’: எதிர்க்கட்சிகள் கேள்வி

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கேரளாவிலிருந்து இன்று தமிழகம் வந்துள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுதல், ராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கினர்.

யாத்திரையை உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ் நாடு வழியாக செல்லும் இந்த யாத்திரை மார்ச் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவு பெறுகிறது. அதனைத்தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில், கேரளாவில் ராம ராஜ்ஜிய மகா சம்மேளமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காலை (செவ்வாய்க்கிழமை) கேரள மாநில எல்லையிலிருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வண்டி தமிழக எல்லைக்குள் வந்தது. பூனலூர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியக்குமாரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளை கடந்து மார்ச் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

தமிழகம் வந்துள்ள ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழக அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. மேலும், மார்ச் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தடையை மீறிய சீமான் கைது

செங்கோட்டையில் 144 தடை உத்தரவை மீறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். ரத யாத்திரை குறித்து கருத்து தெரிவித்த சீமான், 144 தடை உத்தரவு என்றால் அனைவருக்கும்தான் பொருந்தும் என்றும், நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அமைதியாகும் இருக்கும் தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டி அதன்மூலம் அரசியல் லாபம் ஈட்டுவதே மதவாத சக்திகளின் நோக்கம் என்றும் சீமான் குற்றஞ்சாட்டினார்.

பாஜக அரசின் எடுபிடி

மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்தவிருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கும், அதற்கு அனுமதியளித்துள்ள மத்திய பா.ஜ.க அரசின் எடுபிடியான அதிமுக அரசிற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீறி நுழைந்தால் தமிழக எல்லையிலேயே கைது செய்து உத்தரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாரை திருப்திபடுத்த இந்த யாத்திரை?

ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயலும் மதவாத சக்திகளுக்கு மாநிலத்தின் கதவுகளை விரிவாக திறந்துவிட்டதாக தமிழக அரசை சாடிய டிடிவி தினகரன், ஜெயலலிதா நிலைநாட்டிய சமூக நீதி கொள்கைகளை அடியோடு கொன்று புதைத்த நீட் தேர்வு முறைக்கு எதிராக போராட அனுமதி மறுத்த இந்த ஆட்சி, ரத யாத்திரைக்கு மட்டும் அனுமதியும் பாதுகாப்பும் கொடுப்பது யாரை திருப்திபடுத்த என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதுபோன்ற யாத்திரைகளை உடனடியாக பழனிசாமி அரசு தடை செய்திடவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதக் கலவரத்தை உருவாக்குவதே நோக்கம்

அமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்பு வாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை என்று கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரதயாத்திரை என்பது அனைவரும் அறிந்திருக்கிறார்கள் என்றும், 144 தடை உத்தரவு பிறப்பித்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது தமிழக அரசு உடனடியாக அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாத்திரையை எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகள்

கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தமிழகம் வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை எதிர்ப்பது அப்பட்டமான இந்து விரோத செயலாகும் என்றும், இந்துக்கள் திரளான எண்ணிக்கையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் பாஜகவின் தேசிய செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுகிறார்கள்

தமிழக சட்டசபையில் ரத யாத்திரை குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரத யாத்திரை பல மாநிலங்கள் சென்றுவிட்டு தமிழகம் வழியாக கேரளாவில் நிறைவடைகிறது என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் சில அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்றும் பதிலளித்தார்.

யாருக்கோ சாமரம் வீசும் தமிழக அரசு

”சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மறியலில் ஈடுப்பட்ட திமுகவினர்

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதுக்கு எதிராக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட திமுக உட்பட பிற எதிர்கட்சிகள் வெளியேற்றப்பட்டன.

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து, திமுக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ரத யாத்திரை குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “இந்த ரத யாத்திரை 5 மாநிலங்களையும் கடந்து வந்துள்ளது. தமிழகத்தில் சில கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. என்று தெரிவித்தார்

ரத யாத்திரைக்கு பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதே என்று ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அங்கெல்லாம் பெரியார் அண்ணா பிறக்கவில்லை என்று பதிலளித்தார் ஸ்டாலின். -BBC_Tamil

TAGS: