நீலகிரியில் எல்லையை தாண்டி தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது கேரளா: வேல்முருகன்

சென்னை : தமிழகத்தின் உரிமைகளை சிதைக்கப்படும் போதெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமே அரசின் சாதனை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு அது குறித்து மெத்தனமாக இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்நிலையில், தமிழகப் பகுதிக்குள் ஊடுருவி அது தங்களுடைய பகுதி என பெயர்ப்பலகை நட்டிருக்கும் கேரளாவையும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது தமிழக உரிமைகளைத் தொடர்ந்து விட்டுக்கொடுத்து வரும் அதிமுக அரசின் அலட்சியம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்கச் சொன்னது உச்ச நீதிமன்றம். அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதன்படி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்து, நீர்வளத்துறை செயலரைப் பாருங்கள் என்று தட்டிக்கழித்துவிட்டார். இதற்கான அர்த்தம் வெளிப்படை. அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்பதுதான். அதை உறுதி செய்யும் விதமாகவே நீர்வளத்துறை செயலர், “காவிரி நீர் பகிர்வுக்கான திட்டத்தைத்தான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று சொல்லவில்லை” என்கிறார்.

தேவையில்லாத நாடகம்

அப்படியென்றால் நாம் என்ன செய்திருக்க வேண்டும்? மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இனி என்ன செய்வது என்று தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் நின்றுகொண்டு “காவிரி மேலாண்மை வாரியத்தை அமை” என்று கோரிக்கை முழக்கமிட்டுவருகிறார்கள். இதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? தமிழ் மக்களை ஏமாற்றவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசுக்கு வலு சேர்க்கவும்தான் இந்த நாடகம்.

தமிழகப் பகுதிக்குள் கேரள அரசு

நீலகிரியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லைப் பகுதியான நம் தாளூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் உள்ளே வந்து அந்த இடம் தங்கள் பகுதி என கேரளா மலையாளத்தில் பெயர்ப்பலகை நட்டிருக்கிறது. பல முறை கேரளாவைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராடியும் இப்படிச் செய்திருக்கிறது.

தமிழினத்திற்கான அவமானம்

ஆனால் அதிமுக அரசு இதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது தமிழினத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு தான் இந்த ஈபிஎஸ் – ஓபிஎஸ் அரசு என்பது உறுதியாகிறது. ஆக தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகத்தையே செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: