காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கர்நாடகம் முடிவு

பெங்களூரு,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை ஒதுக்கீடு செய்தது.

அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வாரியம் அமைந்தால் காவிரி அணைகளை கட்டுப்படுத்தும் உரிமை கர்நாடக அரசுக்கு இருக்காது. இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளும் இதை வற்புறுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசும் சட்டசபையில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை கட்டாயம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை டெல்லியில் கடந்த 16-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. மேலும் ரத்து செய்யப்பட்ட இந்த கூட்டம் வருகிற 22-ந்தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி விவாதிக்கப்படட்டது. அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாக தகவல் ஏற்கனவே வெளியாகியது.

இந்நிலையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சித்தராமையா தலைமையிலான அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலாண்மை வாரிய விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வுக்கு செல்லப்போவதில்லை எனவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் பேசுகையில், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை, டிசம்பரிலேயே தந்துவிட்டோம். இப்போது தண்ணீர் தர இயலாது என கூறிஉள்ளார். மூத்த  வழக்கறிஞர் பாலி நாரிமன் உள்ளிட்ட சட்ட ஆலோசர்களின் ஆலோசனையை ஏற்று கர்நாடகம் முடிவு எடுத்து உள்ளது.

-dailythanthi.com

TAGS: