காவிரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல்: மத்திய அரசு

டெல்லி : காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்பி வேணுகோபால் காவிரிநீர் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்தறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது : கடந்த மார்ச் 9ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கி காவிரி நீர் தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் 4 மாநில அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக ஹைதராபாத்தில் தென்மாநில நதிகள் பிரச்னை தொடர்பான கூட்டத்தில் தமிழக அரசு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறிப்பாக கர்நாடகம், தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆராயப்பட்டு வருவதாகவும், தீர்ப்பை முழுவதும் அமல்படுத்த சம்மதமா என கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட காவிரி நீரால் பயனடையும் 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் கூறியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்த முடிவையும் கூறாமல் உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஒரு திட்டம் ஏற்படுத்தப்படும் என்று தான் தற்போது தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான ஆவணத்திலும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே இந்த திட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் வருமா என்பது 2 வாரங்களுக்குப் பிறகே தெரிய வரும்.

tamil.oneindia.com

TAGS: