சிறுநீர் கழித்ததால் விபத்தில் காயம் அடைந்தவரை கீழே தள்ளி விட்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்

பாலக்காடு,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் அவருக்கு முதலுதவி கூட அளிக்காமல் பல மருத்துவமனைகள் அலைக்கழித்தன. ஏறக்குறைய 7 மணிநேரம் அழைக்கழிக்கப்பட்ட அந்த தமிழர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுபோல் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று மீண்டும் கேரளாவில் நடந்து உள்ளது.

கடந்த 20-ம் தேதி பாலக்காடு மாவட்டம், நட்டுகல் என்ற இடத்தில் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இவரைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஒரு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அந்த தனியார் மருத்துவமனை தங்களிடம் சிகிச்சை அளிக்க வசதியில்லை எனக் கூறி பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவைத்தது. அந்த ஆம்புலன்சு பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு விபத்தில் காயம்பட்டவரை கொண்டு வந்தது.

ஆம்புலன்ஸ் டிரைவர் காயம்பட்டவரை வாகனத்தில் இருந்து கீழே இறக்கமுற்பட்டபோது, அவர் ஆம்புலஸில் சிறுநீர் கழித்தும், வாந்தி எடுத்திருப்பதைப் பார்த்தார். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆத்திரம் வந்துள்ளது.

மருத்துவமனையின் ஊழியர்கள் ஸ்டிரெச்சர், வீல்சேர் கொண்டு வருவதற்குள், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஸ்டிரெச்சரோடு ஆம்புலன்சில் இருந்து கீழே தள்ளினார். இதில், அந்த ஸ்டிரெச்சர் தலைகீழாகக் கவிழ்ந்தது. அதன்பின் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து கேரள மாநிலத்தில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பினர். அங்குள்ள செய்தி தொலைக்காட்சிகளில் இது ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த விபத்தில் காயம் அடைந்தவர் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, மனிதநேயத்தோடு நடந்து கொள்ளாத அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் பிரிவான ஐபிசி 336ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-dailythanthi.com

TAGS: