மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு
, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்திட்டம் முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்டது என்பதால், அதை புரிந்து கொள்வதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மக்களிடையே இத்திட்டம் குறித்து இருக்கும் சில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் இங்கே தொகுத்துள்ளோம்.
நியூட்ரினோ என்றால் என்ன?
இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. ‘அணு’ (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) ‘பிளக்க முடியாதது’ என்பதாகும்.
இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர். மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல். அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர்.
எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும். முதலில் நியூட்ரினோவிற்கும் நியூற்றான் என்ற பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் “A little neutral one” என்பதாகும்.
சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது.
இதனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் உடலில் பல கோடி நியூட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவி இருக்கும்.
இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது. அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம். இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றது. இது வருவதும் தெரியாது போவதும் தெரியாது.
1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்களுக்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது. 1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது. 2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தகவல்: அறிவியலாளர் விஜய்சங்கர் அசோகன், சுவீடன் (விஜய்சங்கர் அசோகன் இத்திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இந்த நியூட்ரினோ தொடர்பாக பிசாசு துகள் என்னும் புத்தகம் எழுதி உள்ளார்.)
தேனி நியூட்ரினோ ஆய்வு மையம்:
இந்த ஆய்வு மையத்தை அமைப்பது இந்திய நியூட்ரினோ ஆய்வகம். (ஐஎன்.ஓ.). 15 கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 50 அறிவியலாளர்கள் சேர்ந்து தேசிய நியூட்ரினோ கூட்டுக் குழு என்ற ஒன்றை உருவாக்கி இந்த ஆய்வில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த ஆய்வு மையம் அமைக்க முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நீலகிரி மாவட்டம் சிங்காராவில் அமைப்பதாகதான் இருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரையை அடுத்து, இம்மையம் சிங்காராவில் அமைய 2009 ஆம் ஆண்டு அனுமதி மறுத்தார் அப்போதைய சுற்றுசூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ். மையம் அமைக்க திட்டமிடப்பட்ட பகுதி அருகிலேயே பந்திப்பூர் மற்றும் முதுமலை சரணாலயம் இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணம்.
இதன் பின்தான், இத்திட்டம் தேனி மாவட்ட போடி மேற்கு மலைக்கு 2010 ஆம் ஆண்டு இடமாறியது. அதற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகமும் அனுமதி அளித்தது. மரங்கள் வெட்டப்பட கூடாது; அப்பகுதியில் உள்ள காட்டிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
நியூட்ரினோவும், மலை பகுதியும்:
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மலை சார்ந்த பகுதியையே தேர்ந்தெடுக்க என்ன காரணம். இதை சமதளத்தில் அமைக்க முடியாதா? என்பது பெரும்பாலானவர்களின் கேள்வி.
இதற்கு பதிலளிக்கும் அறிவியலாளர் விஜய்சங்கர், “நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதன் இயற்பியல் தன்மை அப்படியானது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும். நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. இதற்காகதான் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையை தேர்வு செய்திருக்கிறார்கள்” என்கிறார்.
என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்?
மலையின் உள்ளே ஓர் ஆய்வு மையத்தையும், மலைக்கு வெளியே அலுவலகம் மற்றும் குடியிருப்பையும் அமைப்பதுதான் திட்டம்.
மலையின் உச்சியிலிருந்து 1,500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப் பெரிய அளவுள்ள காந்தமையப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். இதற்குள் செல்ல 2.1 கி.மீ நீளத்திற்கு 7.5 அகலத்திற்கு குகை அமைக்க இருக்கிறார்கள்.
காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டி அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.
தகவல்: India Based Neutrino Observatory
நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு:
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குத் தடைவிதிக்க வேண்டுமெனக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 2015 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், “இந்தத் திட்டத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளுக்குப் பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து உண்டாகும். ஆகவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ஆய்வு மையத்தைக் கட்டுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லையென்றும் வைகோ கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அது வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இதற்கடுத்து, நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்து இருந்தது. இந்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
அதன் பின் என்ன நடந்தது என்று பிபிசி தமிழிடம் விவரிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தராஜன், “இந்த ரத்து நடவடிக்கையை அடுத்து, மாநில சுற்றுச்சூழல் மதிபீட்டு நிறுவனத்தை இவர்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அணுகினர். இத்திட்டத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்று மதிப்பீட்டு நிறுவனம் கூறியதை அடுத்து, இவர்கள் மத்திய நிபுணர் மதிப்பீட்டு குழுவை அணுகினர். அவர்களும் இது கட்டமைப்பு திட்டம் அல்ல அதனால் இதனை எங்களால் ஆய்விற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது. ஆனால், மத்திய அரசு இதனை சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ள கோரியதை அடுத்து, அவர்கள் இதனை ஆய்வு செய்து திட்டத்திற்கு சாதகமாக அனுமதி வழங்கி உள்ளனர்.” என்கிறார்.
அரசியலமைப்பின் படி குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் சிறப்பு வழக்காக எல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. இது அரசியலமைப்பிற்கே எதிரானது என்கிறார் சுந்தராஜன்.
ஆதரிப்பவர்களின் கருத்து என்ன?
இந்த திட்டத்தில் இருக்கும் அறிவியலாளர் டி. இந்துமதி, இத்திட்டம் குறித்து தேவையில்லாமல் அச்சப்படுகிறார்கள். சிலர் திட்டத்தை தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.
அவர், “நியூட்ரானையும், நியூட்ரினோவையும் தேவையில்லாமல் குழப்பிக் கொள்கிறார்கள். இது அடிப்படையான குழப்பம். நியூட்ரினோவில் ரேடியோ ஆக்டிவிட்டி என்பது கிஞ்சித்தும் இல்லை. இரண்டாவது தவறான புரிதல், நாங்கள் இத்திட்டத்திற்காக நிலத்தடி நீரை பயன்படுத்த இருக்கிறோம் என்பது. அதுவும் உண்மை இல்லை. நாங்கள் பல முறை இது குறித்து தெளிவாக கூறி விட்டோம், தேனி மாவட்டம் வறட்சியான பகுதி என்று அறிந்தே இருக்கிறோம். நிச்சயம் நிலத்தடி நீரை நாங்கள் எடுக்க மாட்டோம்.” என்கிறார்.
அணு கழிவை இங்கே கொட்ட இருக்கிறார்கள் என்ற அச்சம் நிலவுகிறதே என்பது குறித்து கேட்ட போது, “இல்லை. இது மிகவும் தவறான புரிதல். நாங்கள் அங்கே பணி செய்ய இருக்கிறோம். எப்படி நாங்கள் பணி செய்யும் இடத்திலேயே அணு கழிவை கொட்டுவோம்.” என்கிறார். -BBC_Tamil
இந்த அறிவியல் கட்டுரையை தொகுத்தவருக்கு அல்லது எழுதியவருக்கு நான் என் பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறேன் . எங்கும் மொழி மாற்று தவறு இல்லாமல் பார்த்து கொண்டதிற்கு மகிழ்ச்சி ! மேலும் இந்த ஆராச்சியை நான் வரவேற்கிறேன் ! இதனால் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அணுவிலும் மிக சிறிய துகள்களை நாம் தெரிந்து கொள்ளலாம் ! இது வளர்ச்சியை ஊக்கு விக்கும் ஒரு திட்டம். எனவே இதை ஆராயாமல் விட கூடாது !
நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று எனக்கு புரிய வில்லை. இது போன்ற ஆராய்ச்சி ஜப்பானிலும் அமெரிக்காவிலும் நடக்கின்றது- இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்று தெரிய வில்லை–அவ்வளவு ஆபத்து ஆனது என்றால் அமெரிக்காவும் ஜப்பானும் இது போன்ற ஆராய்ச்சிகளை செய்யுமா ? இது பற்றி தெளிவாக தெரிந்த அறிவியலாரிருந்தால் தெரிய படுத்தலாம்- மற்றவர்களும் தெரிந்து கொள்ளலாம்.
ஓர் உயிருக்குக் கூட ஆபத்து வரக்கூடாது என்று ஜப்பான், அமெரிக்கன் நினைப்பான். அதற்கான வேலைகளை அவன் செய்வான். இந்திய அரசியல்வாதியோ இந்தத் திட்டத்தினால் எத்தனை பேர் சாவான், எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று கணக்குப் பண்ணின பிறகு தான் திட்டத்தயே ஆரம்பிப்பான்!